கேரள கர்ப்பிணி யானையின் உடனடி மரணத்துக்கு நீரில் மூழ்கியதும் நுரையீரல் செயலிழப்புமே காரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்து யானை ஒன்று பசியுடன் ஊருக்குள் வந்துள்ளது. பசியுடன் தெருவில் சுற்றிய அந்த யானை, மனிதர்கள் கொடுத்த உணவுகளை உண்டுள்ளது. கருவுற்றிருந்த அந்த யானைக்கு, அன்னாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்து சில மனித மிருகங்கள் கொடுத்துள்ளன. அதை யானை சாப்பிட்ட போது, அதன் வாயிலேயே வெடிமருந்து வெடித்திருக்கிறது. இதனால் வாய் மற்றும் நாக்கில் பலத்தைக் காயமடைந்த யானை வலி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடியுள்ளது.
ஆனாலும் எந்த மனிதரையும் தாக்காமல், எந்த வீட்டையும் சேதப்படுத்தாமல் அந்த யானை சென்றிருக்கிறது. பசி அதிகமாக இருந்ததால் எதையாவது உண்ணலாம் என யானை நினைத்த போதும், வாயில் ஏற்பட்ட காயத்தால் எதையும் உண்ண முடியாமல் தவித்துள்ளது. பின்னர் வலி தாங்க முடியாமல் ஆற்றில் இறங்கி நின்றுள்ளது. இதை அறிந்த வனத்துறையினர் இரண்டு யானைகளின் உதவியுடன் அதனை மீட்க முயன்றுள்ளனர்.
சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்ட யானை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. இந்தத் தகவலை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கேரள வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் சோகத்துடன் பகிர்ந்தார். ஆகவே கொன்றவர்களுக்கு உரியத் தண்டனையைக் கொடுக்க வேண்டும் எனப் பலரும் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்த பெண் யானைக்கு 15 வயதாகிறது.
இந்நிலையில் அந்த யானையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில் “யானை அதிகப்படியான நீரை உறிஞ்சியுள்ளது, இதன் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டுச் செயலிழந்துவிட்டது. அதுவே யானை உடனடியாக உயிரிழந்ததற்கான காரணம். யானையின் வாய்ப் பகுதி வெடிபொருள்களால் வெடித்துள்ளது, அதனால் அதனுடைய வாய் பகுதி முழுமையாகக் காயப்பட்டு சீழ் பிடித்திருந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வலி, மன உளைச்சல் காரணமாக அந்த யானை கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்திருக்கிறது. இதனால் அந்த யானை முற்றிலுமாக சீர்குலைந்து நீரில் நின்று சரிந்து பின்பு மூழ்கியுள்ளது” என்று அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.