மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கவர்னரின் பரிசீலனையில் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர்தான் பரோல் வழங்க வேண்டும் என்று அரசு காத்திருக்க தேவையில்லை என்று ஐகோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, 90 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் பதவி வகிப்பவர்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் தான், அவர்கள் ஒரு முடிவை எடுக்க கால நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியது. இந்த தீர்மானத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவேண்டும். இல்லை திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் மீது எந்த முடிவு எடுக்கப்படவில்லை” என்று அதிருப்தி தெரிவித்தனர்.
பின்னர், “7 பேர் விடுதலை தொடர்பாகவும், பேரறிவாளனுக்கு ‘பரோல்’ வழங்குவது தொடர்பாகவும் தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். பரோல் குறித்து மனு அளித்து கிட்டத்தட்ட 4 மாதங்களாகிவிட்டது. ஏன் இன்னும் முடிவெடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கலாமா? என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் தாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல 7 பேர் விடுதலை தொடர்பாக அதிருப்தி தெரிவித்ததையும் சுட்டிக்காட்டினார்கள். அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததை கவர்னரிடம் தெரிவித்து, ஏன் இவ்வளவு காலதாமதம் என்று கேள்வி எழுப்பி அதற்கான கடிதம் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் கவர்னர் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஜெயின் கமிஷனால் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை குழும ஆணையத்தினுடைய விசாரணை இன்னும் நிறைவடையாததால் அந்த அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் கவர்னர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பரோல் தொடர்பாக 3-ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.