தமிழகத்தில் சிவனடியார் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதற்கு காரணமான காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தை என் ஆத்மா பழிவாங்காமல் விடாது என அவர் வெளியிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் புளியம்பட்டி குண்டாங்கல் காடு பகுதியை சேர்ந்த சரவணன், சுற்றுவட்டார மக்களுக்கு தாயத்து கட்டுவது, மந்தர கயிறு கட்டுவது, பேய் ஓட்டுவது போன்ற வேலைகளை செய்து வந்தாகவும் அவரை அப்பகுதி மக்கள் சிவனடியார் என்று அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் அவரை பார்க்க வந்த பெண் ஒருவருக்கு எந்திரம் கட்டிவிட்டு அப்பெண் வாங்கி வந்த உணவை சரவணன் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த தேவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மைக்கேல் அந்தோணி என்பவர் சிவனடியார் சரவணனையும் அப்பெண்ணையும் சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
மேலும் இருவரையும் தனது செல்போன் மூலம் படம் எடுத்துவிட்டு என்ன செய்யப் போகிறேன் பார் என சொல்லி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே எஸ்ஐ மைக்கேல் அந்தோணி சிவனடியாக சரவணனை தாக்கிய போது அவரது மகன் சங்கர், மகள் கவிதா ஆகிய இருவரும் நேரில் பார்த்துள்ளனர்.
தனது பிள்ளைகள் முன்பே தன்னை எஸ்ஐ அடித்ததால் அவமானத்தால் மனமுடைந்த சரவணன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை சிவனடியார் சரவணன் வீட்டு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அங்கு சென்று உறவினர்கள் பார்த்த போது, சரவணன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இந்த நிலையில் சிவனடியார் சரவணன் செல்போனில், தற்கொலைக்கு முன்னர் பதிவு செய்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. அதில், தனது ஆத்மா எஸ்ஐ மைக்கேல் அந்தோணியின் குடும்பத்தை விடாது, என் சாபத்தில் இருந்து நீ தப்ப முடியாது என சிவனடியார் கூறுவது போன்ற காட்சிகள் உள்ளன.
தகவல் அறிந்து வந்த பொலிசார் சரவணன் உடலை அங்கேயே வைத்து பிரேதப்பரிசோதனை செய்து அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர்.
மேலும் சரவணன் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.