சர்வதேச பார்வையுடன் இந்திய ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த பத்ரிகா குழுமத்தின் தலைவர் குலாப் கோத்தாரியின் இரண்டு புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சியில் டெல்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி புத்தகங்களை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இந்தியா தனது பங்களிப்பை வலுப்படுத்தி வருவதால், நமது நாட்டின் மீது உலகம் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.
அதேநேரத்தில், சமூக ஊடகங்களின் தாக்கத்தால், பத்திரிகைகளும், செய்தித் தொலைக்காட்சிகளும் விமர்சனத்திற்கு உள்ளாவதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொருவரும் விமர்சனங்களில் இருந்து கற்றுக் கொள்வதாகவும் பிரதமர் கூறினார். இந்திய பொருட்கள் மட்டுமல்லாது இந்திய குரலும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.