ஐக்கிய நாடுகள் சபையின்ஆலோசனை குழு உறுப்பினராக இந்திய தூதுவர் விதிஷா மைத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில், 193 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இவை, ஐ.நா.நிர்வாகம் மற்றும் வரவு- செலவுத் திட்ட கேள்விகளுக்கான ஆலோசனைக் குழுவிற்கு, பிராந்தியம் மற்றும் தகுதி அடிப்படையில் 16 உறுப்பினர்களை தேர்வு செய்கின்றன.
இக்குழுவின், 2021- 2023ம் ஆண்டிற்கான உறுப்பினர் தேர்வு நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. அதில், ஆசிய- பசுபிக் நாடுகள் பிரிவில், விதிஷா மைத்ரா தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு ஆதரவாக 126 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்து போட்டியிட்ட, ஈரான் பிரதிநிதி அலி முகமது பேக் அல் தபாக், 64 வாக்குகள் பெற்றார்.
இது குறித்து ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தர தூதுவர், டி.எஸ்.திருமூர்த்தி கூறியுள்ளதாவது, “ஐ.நா.பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினராக, சமீபத்தில் இந்தியா தேர்வானது.
இதையடுத்து, ஐ.நா.நிர்வாகம் மற்றும் வரவு- செலவுத் திட்ட கேள்விகளுக்கான ஆலோசனைக் குழுவிற்கு, விதிஷா மைத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது, இந்தியா மீது உறுப்பு நாடுகள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இதற்காக உறுப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.