சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் உறவுநிலை பழைய பாதைக்கு திரும்புவது கடினம் என வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “இந்தியா – சீனா எல்லை பிரச்சினை ஏற்பட்டு 8 மாதங்களாகியுள்ள நிலையில் பேச்சுவார்த்தைகள் அடிப்படை பிரச்சினையை தீர்க்கத் தவறிவிட்டன.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு சீனாவுடனான நமது உறவு மிகக் மோசமான கட்டத்தில் உள்ளது. ஒப்பந்தங்களை மீறி லடாக் எல்லைக்கு ஆயிரக்கணக்கான வீரர்களைக் முழு தயாரிப்புடன் சீனா கொண்டு வந்தது.
இதுவே இரு தரப்பு உறவை மோசமாக பாதிக்க காரணம். இரு படையினரும் நெருக்கமாக இருந்ததால் மோதல் ஏற்பட்டது. தற்போது இரு தரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒரு பிரச்சினையாக இல்லை. ஆனாலும் உறவை பழைய பாதைக்கு திருப்புவது மிகப் பெரிய பிரச்சினை.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசினேன். மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சந்தித்தேன்.
பாதுகாப்பு அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் மற்றும் தூதர்கள் இடையே சந்திப்புகளும் பேச்சுவார்தைகளும் நடந்தன. ஆனாலும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை அவர்கள் மதிப்பதில்லை” எனக் கூறினார்.