புதுடெல்லி: வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தப்பிச் சென்ற வைர நகை வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவில் இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல வைர நகை வியாபாரி நீரவ் மோடி. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கடன் வாங்கினார். ஆனால், அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்று விட்டார். அவர் இங்கிலாந்தில் பதுங்கி இருப்பதை இந்திய உளவுத்துறைகள் கண்டுபிடித்தன.
இதையடுத்து, இந்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று, இங்கிலாந்து அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. மேலும், நீதித்துறையின் மூலமும் சிபிஐ, அமலாக்கத் துறைகள் நடவடிக்கை எடுத்தன. இது தொடர்பாக, இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த நீதிமன்றம், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி கடந்தாண்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக இந்த விவகாரம் அனுப்பப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த பிரச்னையில், இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் நேற்று இறுதி முடிவு எடுத்தது. நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டது.
இதைத் தொடர்ந்து, நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டனை கொடுப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி இருக்கின்றன.