புதுடெல்லி: கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நோய் பாதித்த மாநிலங்கள், மாவட்டங்கள் குறித்து பிரதமர் மோடி அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது தொற்று பரவலை தடுக்க முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாநிலங்கள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. நாள் தோறும் புதிதாக நோய் தொற்றின் காரணமாக சராசரியாக 4லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பாதித்த மாநிலங்கள், மாவட்டங்கள் குறித்து பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 12 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புக்கள் குறித்த விவரங்கள், அதிக நோய் தொற்று கொண்ட மாவட்டங்கள் பற்றிய விவரங்கள் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 17.7 கோடி தடுப்பூசி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 45வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள மக்களில் 31சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து மாநிலங்களுக்கு உதவி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும். விரைவான மற்றும் முழுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகளை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
10 சதவீதம் கொரோனா நோய் தொற்றுள்ள மாவட்டங்கள், 60 சதவீதம் ஆக்சிஜன் மற்றும் ஐசியூ படுக்கைகள் நிரம்பிய மாவட்டங்கள் உள்ள மாநிலங்கள் அடையாளம் காணப்பட்டு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது” என்றார். அடுத்த சில மாதங்களில் தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். தடுப்பூசியை வீணாக்கும் மாநிலங்கள் குறித்த விவரங்களையும் பிரதமர் கேட்டறிந்தார்.