புதுடெல்லி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் மருத்துவ ஆக்சிஜன் போதுமானதாக இல்லை. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று முன்தினம் அவசர கடிதம் எழுதினார். அதில்,”தமிழகத்திற்கு தற்போது 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் தினமும் 440 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. எனவே தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு உடனடியாக ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்’’ என வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தமிழகத்திற்கான ஆக்சிஜனை உற்பத்தி ஒதுக்கீட்டை 220 மெட்ரிக் டன் அளவில் இருந்து 419 மெட்ரிக் டன் ஆக உயர்த்தி அனுமதி வழங்கியுள்ளது.
- ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஐநாக்ஸ் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் இருந்து ஒருநாளுக்கு 50 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அது 140 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
- சேலத்தில் உள்ள ஜிண்டால் உருக்கு ஆலையில் இருந்து 10 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அது 15 மெட்ரிக் டன் ஆக உயர்த்தி உள்ளது.
- ஈரோட்டில் உள்ள தேசிய ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் இருந்து 30 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்ட நிலையில், அது 38 மெட்ரிக் டன்னாகவும், தஞ்சாவூர் சிக்ஜில்சோல் தனியார் ஆலையில் இருந்து 20 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்ட நிலையில், அது 40 மெட்ரிக் டன் அளவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- மேலும், புதுச்சேரியில் உள்ள ஐநாக்ஸ் ஆலையில் இருந்து தினசரி 40 மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து 44 மெட்ரிக் டன் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல வேறு சில நிறுவனங்களில் இருந்து மத்திய அரசு தொகுப்பின் மூலமாக தமிழகத்திற்கு வரும் ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதிய ஒரே நாளில் மத்திய அரசு ஆக்சிஜன் ஒதுக்கீடு அளவை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.