தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தாலும், நோய் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- கொரோனா பரவலை தடுக்கும் வகையில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாக அனைத்து கட்சி தலைவர்களும் அரசுக்கு ஆலோசனை வழங்கினர்.
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும், அனைத்துக் கட்சியினரும் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை முற்றிலுமாக நிறுத்துவது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தாலும், நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுபடுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்க நேற்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக சார்பில் டி.ஆர். பாலு, ஆர்.எஸ். பாரதி, அதிமுக சார்பில் டி.ஜெயக்குமார், டாக்டர் வெ.பரமசிவம், காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, முனிரத்தினம், பாஜ சார்பில் நயினார் நாகேந்திரன், எம்.என்.ராஜா, பாமக சார்பில் ஜி.கே. மணி, மதிமுக சார்பில் எம். பூமிநாதன், சின்னப்பா, விசிக சார்பில் ம.சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் சார்பில் வீ.பி.நாகைமாலி, மா. சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராமச்சந்திரன், க.மாரிமுத்து, மமக சார்பில் ஜவாஹிருல்லா, கொமதேக சார்பில் ஈஸ்வரன், தவாக சார்பில் வேல்முருகன், புரட்சி பாரதம் சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி கலந்து கொண்டனர்.
தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்றார். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து, அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு, அவர்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாகத் தெரிவித்து, அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினர். பின்னர், ஒருமனதாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மான விவரம்:
- கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது.
- நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் இக்காலக் கட்டத்தில், அனைத்துக் கட்சியினரும் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை முற்றிலுமாக நிறுத்துவது.
- நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதால், கள அளவில் அனைத்துக் கட்சியினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைபிடித்திடுமாறு மக்களை அறிவுறுத்தி, வழிகாட்டிகளாக நடப்பது, மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் அனைவரும் முழு மனதோடு ஈடுபடுவது.
- நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்றக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கலாம்.
- ஒருமனதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
இறுதியில், அமைச்சர் துரைமுருகன் நன்றியுரையாற்றினார். இக்கூட்டத்தில் டிஜிபி திரிபாதி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சிறப்புப்பணி அலுவலர் செந்தில்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், பொதுத்துறையின் செயலாளர் டி.ஜகந்நாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.