டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர்மோடி உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகள் தங்களின் 23 வயதை அடையும் போது ரூ.10 லட்சம் நிவாரணம் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவி நிதியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு PM CARES நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு மாநிலங்கள் தங்களுடைய தரப்பில் இருந்து இதுபோன்ற நிவாரணங்களை அறிவித்து கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும் சூழ்நிலையில் பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்து அறிவிப்பை வெளியிட்டிருப்பது நாடு முழுவதும் கோவிட் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் அளிக்கும் ஆறுதலான விஷியமாக இருக்கிறது. பல குடும்பங்களில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் தொடர்ந்து மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் பெற்றோர் இருவரும் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைகளை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எந்த அளவிற்கு கவனித்து கொள்வார்கள் என்பது ஒவ்வொரு சூழ்நிலையிலும் வேறுபட்டதாக இருக்கிறது. எனவே அரசுகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிவாரணம் குழந்தைகளின் கல்வி, வளர்ப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.