புதுடெல்லி: நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்தபடியாக உயரிய விருதாக பத்ம விருதுகள் கருதப்படுகின்றன. இந்த விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குடியரசு தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
இதையடுத்து, பத்ம விருதுகளுக்காக பரிந்துரைக்கப்படுவோரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. அரசின் பிரத்யேக இணையதளத்தில் கடந்த 1ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. செப்டம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இந்நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பத்ம விருதுகளுக்கான தகுதி வாய்ந்த நபர்களை பரிந்துரை செய்யுங்கள்.
இதற்கான திறமை வாய்ந்த மற்றும் சாதனையாளர்களை அடையாளம் காண, சிறப்பு குழுவை அமைக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் மட்டுமின்றி மத்திய அமைச்சகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர்களும் பத்ம விருதுகளுக்கான விண்ணப்ப மனுக்களை அனுப்பி வைக்கலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.