செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா திமுக அரசு பதவியேற்ற 30 நாளில் வியத்தகு சாதனைகள்!

திமுக அரசு பதவியேற்ற 30 நாளில் வியத்தகு சாதனைகள்!

8 minutes read

சென்னை: கொரோனா 2ம் அலை பெருந்தொற்று காலத்தில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற 30 நாளில் வியத்தகு சாதனைகளை செய்துள்ளது அந்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதல்வராக பதவியேற்றதும் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 புதிய திட்டங்களுக்கான 5 கோப்புகளில் கையொப்பமிட்டார்.

2.07 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய ஆணை, மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகாண ‘உங்கள் தொகுதியில் முதல்வர் ’ என்ற புதிய துறை உருவாக்கம், தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா நோய்க்கு சிகிச்சை, சிகிச்சைக்கான செலவினத்தை அரசே ஏற்பு ஆகிய 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ஆட்சிப்பொறுப்பேற்ற 30 நாளில் திமுக அரசு வியத்தகு சாதனைகளை செய்துள்ளது. இவற்றை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளிக் காட்சி மூலமாக கடந்த மாதம் 7ம் தேதி ஆய்வு மேற்கொண்டார். நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுவரும் கோவிட் பராமரிப்பு மையத்தை முதல்வர் பார்வையிட்டார்.

இம்மையத்தில் முதற்கட்டமாக 300 படுக்கைகளும், அடுத்தகட்டமாக 500 படுக்கைகளும் என மொத்தம் 800 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக 11 கிலோ லிட்டர் கொள்ளளவுக்கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், உயிரிழப்புகளை குறைப்பதுபற்றியும், அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை வசதிகள் தங்குதடையின்றிகிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் கலந்தாலோசித்தார்.  பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின்ஒத்துழைப்பைக் கோரினார்.

தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையான ஆக்சிஜன் தொடர்பாக, மாநிலத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பொது விநியோகத்திட்டத்தின் கீழ் கூடுதல் அரிசி வழங்குவது குறித்தும், தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கிணங்க அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 வழங்கிடும் வகையில், முதல் தவணையாக மே மாதத்தில் ரூ.2,000 வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்றது.

மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகாண ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களுக்குள் ஆய்வு செய்து, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘ உங்கள் தொகுதியில் முதல்வர்’  என்ற திட்டத்தை செயல்படுத்த நியமிக்கப்பட்ட ஷில்பா பிரபாகர் சதீஷிடம், கோரிக்கை மனுக்கள் அடங்கிய ஒரு பெட்டியும் அனைத்து பெட்டிகளின் சாவிகளையும் ஒப்படைத்து, நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். கோவிட் பெருந்தொற்று முழு ஊரடங்கு தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் தொழில் மற்றும் வணிகச் சங்கத்தினர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். இந்தக்கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 மு.க.ஸ்டாலின் தலைமையில்நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கிணங்க,கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும்,அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

ஆண்டுதோறும் கொளத்தூர் தொகுதியில் உள்ள இஸ்லாமியப் பெருமக்களுக்கு,ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடையும் ரம்ஜான் அன்று அறுசுவை உணவு உண்ணத் தேவையான பொருட்களையும் வழங்குவதை வழக்கமாகவைத்திருக்கும் முதலமைச்சரும் கொளத்தூர் தொகுதிசட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் தமது இல்லத்தில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 20 இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகளும் பரிசுப் பொருட்களும் வழங்கினார்.

நாளொன்றுக்கு தமிழகத்திற்குக் குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்தை ஒதுக்கீடு செய்யுமாறும் மத்திய அமைச்சர் பியூஷ்கோயலிடம் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தினார். 2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினை தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் நவம்பர் / டிசம்பர் 2020க்குண்டான பருவத் தேர்வுகளில் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களது வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தைக் கருதியும், நன்குப் படிக்கும் மாணாக்கர்கள் தங்களுக்கு மதிப்பெண்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக தெரிவித்ததையும் கருத்தில் கொண்டு, உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுடன் அண்ணா பல்கலைக்கழக தேர்வு குறித்து கலந்தாலோசித்தார்.

பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாகச் செயலாற்றுவோம். தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து நிற்போம் என மு.க.ஸ்டாலின் அன்பு வேண்டுகோள் விடுத்தார். கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளித்திட சென்னை மீனம்பாக்கத்தில் 70 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்தா சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் மற்றும் 70 படுக்கை வசதிகளுடன் கூடிய அலோபதி சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்வதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் இறக்குமதி செய்ய மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, அவர்களுடைய கடன் சுமையைக் குறைக்கும் வகையில், 6 மாதகாலத்திற்கு அவகாசம் வழங்கிட வேண்டும் என்றும், இந்தக் காலத்திற்கு வட்டி ஏதும் வசூலிக்கப்படகூடாது என்றும், தொழிலாளர்களிடமிருந்து மாதந்தோறும் வசூலிக்கப்படும் வருங்காலவைப்புநிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதித் தொகையை, ஆறு மாதங்களுக்கு பிடித்தம் செய்ய கூடாது என்றும் வலியுறுத்தி, பிரதமருக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

கோவிட் தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், இத்தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையானதடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளையும் மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, ஜி.எஸ்.டி. கவுன்சிலோடு கலந்தாலோசித்து, இந்தப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதம் என நிர்ணயிக்கவேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு தனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக, ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 4 லட்சம் மனுக்கள் இதுவரை பெறப்பட்டு இத்துறையில் சுமார் 70,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியதை குறிக்கும் வகையில், பத்து பயனாளிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் நலத் திட்ட உதவிகளை இன்று வழங்கினார்கள். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறைதிட்டத்தின் கீழ் ஆதம்பாக்கத்தை சேர்ந்த ராணிக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையினை வழங்கினார். கொரோனா நிவாரண நடவடிக்கை தொடர்பாகத் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில், முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் கூட்டமைப்புகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்திட பெருமளவில் பங்களிப்பு அளித்திட வேண்டுகோள் விடுத்தார். திருப்பூர் மாவட்டம், நேதாஜி ஜவுளிப் பூங்காவில், 18 முதல் 44 வயரை வரைஉள்ள பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் தொற்று பரவுதலை தடுக்கும் விதத்தில் அரசுத் துறையை சார்ந்த அலுவலர்கள் தீவிரப் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த பணியின் மூலமாக தொற்று ஏற்பட்டு தங்கள் இன்னுயிரை இழந்தவர்களின் 13 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்குதலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.3.25 கோடிநிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிறப்பு சிகிச்சை மையத்தினை திறந்து வைத்து, 10 நாட்களுக்குள் கூடுதலாக 500 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

 மதுரை மாவட்டம், தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளில் முதற்கட்டமாக 200 படுக்கைகொண்ட கோவிட் சிறப்பு சிகிச்சை மையத்தினை திறந்துவைத்தார். அப்போது, இம்மையத்தில் உடனடியாக கொரோனா தொற்றுநோயாளிகளை அனுமதித்து உரிய சிகிச்சை அளித்திட மாவட்ட நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினார். திருச்சிராப்பள்ளி கலையரங்கம் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவ முகாமை திறந்துவைத்து 18 வயது முதல் 44 வயதுள்ளவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்குஅவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துச் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் குழுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தற்போது நிலவும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சர்களை தொடர்புடைய மாவட்டங்களுக்கு நியமித்துள்ளார்கள். கொரோனா தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனாவே இல்லை என்ற சூழலை நான் உருவாக்கினேன் என்று தலை நிமிர்ந்து நீங்கள் சொல்லக் கூடிய அளவுக்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தொடர்புடைய துறைகள் மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென்று அறிவுறுத்தினார். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

இதனை உயர்த்தி வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையினைப் பரிவுடன் பரிசீலித்து, அதனை ரூபாய் 10 லட்சமாக உயர்த்தியும், ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையினை ரூபாய் 3 ஆயிரத்திலிருந்து, 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கத்தை நமது மாநிலம் கட்டுப்படுத்துவதற்காக, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலான ஆலோசனைக் கூட்டத்தில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி அடைவது அவசியம் என்பதை மனதில் கொண்டு, அடுத்த ஓரிரு வாரங்களுக்கு அனைத்து முயற்சிகளையும் முனைப்புடன் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். தொற்று பரவல் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மின் ஆளுமை ஆணையர்அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் எவ்வாறு கணினியில் பதிவு செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். இத்துறையின் கீழ் பயனடைந்த தேனி, இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் சென்னையை சேர்ந்த பயனாளிகளுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடினார்.

அவர்களின் கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கிடைக்கப்பெற்ற பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், கொரானா தொற்று பரவாமல் இருக்க ஒவ்வொரு பயனாளிகளிடமும் முகக்கவசம் கட்டாயம் அணியுமாறு அறிவுறுத்தினார். தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில், நிதி வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, இதுவரை 186.15 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.

பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா ரூ. 5 லட்சம் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும், அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கவும் இக்குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும் உத்தரவிட்டார். இவை உள்பட 30 நாளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்துள்ள சாதனைகள் பட்டியலிடப் பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More