புதுடெல்லி: மேற்குவங்கத்தில் சட்ட மேலவை மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு நாடாளுமன்றம், ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மோடி – மம்தா மோதலுக்கு மத்தியில், இவ்விவகாரம் சாத்தியமாக வாய்ப்பில்லை என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றினாலும், மாநில முதல்வரான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். சட்டப்பேரவை உறுப்பினர் அல்லாதவர் முதல்வராக பதவி ஏற்றால், ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும்.
தற்போதைய சூழலில், இடைத்தேர்தல்களை நடத்துவது முடியாத காரியம் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. இதன்படி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவது சாத்தியம் இல்லாததாக இருந்தது. இந்நிலையில் நேற்று, மாநில சட்டப்பேரவையில், சட்ட மேலவை உருவாக்குவதற்கான தீர்மானத்தை மம்தா தலைமையிலான அரசு நிறைவேற்றியது.
இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலவை உருவாக்கப்பட்டதால், சட்ட மேலவை உறுப்பினராகி முதல்வர் பதவியில் தொடர மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். மேற்கண்ட இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறுகையில், ‘இந்திய அரசியலமைப்பின் 169வது பிரிவின்படி, மாநிலத்தில் சட்ட மேலவை அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட வேண்டும்.
அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் தேவை. அவ்வாறு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் மூன்றில் ஒரு பங்கு நியமனங்களை உருவாக்க முடியும். அதன்படி 98 எம்எல்சி பதவிகள் உருவாகும். ஆனால், தற்போது கொண்டு வரப்பட்ட மேலவை மசோதாவை, மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும்.
அங்கு அந்த மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இன்றைய மோடி – மம்தா மோதலுக்கு மத்தியில் மேற்குவங்க மேலவை மசோதாவுக்கு சாத்தியமாகுமா? என்பது கேள்வியாகத்தான் உள்ளது’ என்றனர்.