செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா கலைஞர் படத்தை ஜனாதிபதி இன்று திறக்கிறார்!

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா கலைஞர் படத்தை ஜனாதிபதி இன்று திறக்கிறார்!

3 minutes read

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சட்டப்பேரவையில் கலைஞரின் திருவுருவப்படத்தை திறந்து வைக்க, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டமன்றம் 12.1.1921 அன்று தொடங்கியது.

அதை நினைவுப்படுத்தக்கூடிய வகையில், சட்டமன்ற நூற்றாண்டு விழாவை கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது. இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார். அப்போது, சட்டமன்ற நூற்றாண்டு விழாவை தலைமை தாங்கி நடத்தி தரவும், சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

 இதேபோல், மதுரையில் கலைஞர் பெயரால் அமைய இருக்கக்கூடிய நூலக அடிக்கல் நாட்டு விழா, சென்னை கிண்டியில் அமைய இருக்கும் அரசு பன்னோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, சுதந்திரம் பெற்று 75 ஆண்டை குறிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் நினைவுத்தூண் அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தி வைக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.   இதற்காக,  சபாநாயகர் அப்பாவு ஜனாதிபதியை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

இதேபோல், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தையும் கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழக சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கி விழாவுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காலை 9.50 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 12.55 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 1.10 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார்.    பின்னர், மாலை 4.35 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சாலை மார்க்கமாக தலைமை செயலகம் வருகிறார். மாலை 5 மணிக்கு தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

நிகழ்ச்சியில், சபாநாயகர் அப்பாவு வரவேற்புரை வழங்குகிறார். பின்னர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவப்படத்தை  திறந்து வைக்கிறார்.  இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுவார். பின்னர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையுரை ஆற்றுகிறார். இதையடுத்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விழாப்பேருரை ஆற்றுகிறார். விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.  இவ்விழாவில் பங்கேற்க திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை  உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 கொரோனா பரவல் காரணமாக, விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்துக்குள் நுழையும் அனைவரும் அடையாள அட்டை காண்பித்த பிறகே அனுமதிக்கப்படுவர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, சட்டப்பேரவை வளாகம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் திருவுருவப்படம் திறப்பு விழாவை முன்னிட்டு சட்டப்பேரவை வளாகம், தலைமை செயலகம் சாலை, போர் நினைவு சின்னம் ஆகியவை மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் கலைஞர் திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் இன்று இரவு கிண்டி கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி தங்குகிறார்.

இதையடுத்து, நாளை  காலை விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி செல்கிறார். நாளை மறுநாள் 4ம் தேதி வெல்லிங்டன் பாதுகாப்பு சேவை ஊழியர்கள் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 5ம் தேதி ஓய்வெடுக்கும் அவர் 6ம் தேதி காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்திற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

ஜனாதிபதி வருகையையொட்டி சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மாநகர் முழுவதும் விடியவிடிய வாகன சோதனை நடத்தப்பட்டது.  ஓட்டல்கள், லாட்ஜ்களிலும் சோதனை நடத்தப்பட்டது. விமானநிலையத்தில் இருந்து கவர்னர்  மாளிகை வரையிலும், பின்னர் அங்கிருந்து விழா நடைபெறும் தலைமைச்செயலகம்  வரையிலும் பாதுகாப்பு ஒத்திகையை போலீசார் மேற்கொண்டனர்.

ஜனாதிபதி வருகையின்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கோவை, ஊட்டியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி வருகையையொட்டி செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

* சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்றம் 12.1.1921ல் அமைக்கப்பட்டது.
* சட்டமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
* ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சென்னையில் 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More