கொவிட் வைரஸ் தாக்குதல் காலங்களில் கூட சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் ஜம்மு – காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் இரண்டாவது அலை இந்தியாவைத் தாக்கும் முன் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீர் சென்றதாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், நவம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரை, 36,728 சுற்றுலா பயணிகள் காஷ்மீர் வருகை தந்தனர். இருப்பினும், நவம்பர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரை 1,13,010 சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போன்று ஜம்மு – காஷ்மீர் பகுதிகளில் சுற்றுலா துறையை ஊக்குவிக்க பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் 80 சதவீதம் பூர்த்தியாகியுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் சுற்றுலாத் துறை முன்னுரிமைத் துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனால்தான்; தடுப்பூசி வழங்கும் போது சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமை அளித்துள்ளோம் என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யூனியன் பிரதேசத்தின் சுற்றுலாத்தளங்களை அழகுமயப்படுத்தல் மற்றும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கும் அதேவேளை, உள்ளூர் திறமைகளுக்கு தேசிய அளவில் தங்களை நிரூபிப்பதற்கான ஒரு தளத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடனக் கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், நடிகர்கள், நடன இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள் உள்ளிட்ட உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்பளிக்கும் வகையில் புதிய கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.