புதுடெல்லி: உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக சில குறிப்பிட்ட வகை சிரிஞ்சுகளின் ஏற்றுமதி அளவுக்கு ஒன்றிய அரசு 3 மாதங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது வரை 94 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசு, அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இதனால், நாடு முழுவதும் தொடர் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக, ஊசி போடுவதற்காக பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட சில சிரிஞ்சுகளின் ஏற்றுமதி அளவுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாயின், `கடைசி குடிமகன் வரைக்கும்…’ என்ற கொள்கையின் அடிப்படையில், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை ஒன்றிய அரசு நாடு முழுவதும் தீவிரப்படுத்தி உள்ளது.
இதனால், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக, 0.5 மி.லி., 1 மி.லி., ஏடி சிரிஞ்ச், 0.5 மி.லி., 1 மி.லி., 2 மி.லி. 3 மி.லி. டிஸ்போசபிள் சிரிஞ்ச், 1 மி.லி., 2 மி.லி., 3 மி.லி. ஆர்யூபி சிரிஞ்ச் உள்ளிட்ட 3 குறிப்பிட்ட வகை சிரிஞ்சுகளின் ஏற்றுமதி அளவுக்கு மட்டும், அடுத்த 3 மாதங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது,’ என கூறப்பட்டுள்ளது.