டெல்லி: உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, அவரது உடல்நலம் தெரிவருவதாக தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல் நிலை பாதிப்பு காரணமாக கடந்த புதன்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் அயர்ச்சியால் அவதிப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவ குழுவிடம் மன்மோகன் சிங்-ன் உடல் நிலை குறித்து விவரங்களை கேட்டறிந்தனர்.
இதனிடையே மன்மோகன் சிங் உடல் நிலை குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, அவருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சையின் எதிரொலியாக ரத்தத்தின் பிளேட்லட் எனப்படும் ரத்த சிறு தட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மன்மோகன் சிங்-கின் உடல் நிலை அபாயக் கட்டத்தை தாண்டி இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.