சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள காவலர் கவிதா உடலுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினார். இன்று காலை 9 மணியளவில் தலைமைச் செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டடத்தின் அருகில் உள்ள 75 ஆண்டுகால பழமை வாய்ந்த மரம் மழையினால் வேரோடு சாய்ந்து விழுந்ததில், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கவிதா என்ற போக்குவரத்து காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரின் உடலானது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தற்போது அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவரம் அறிந்த உடனே வேலூரில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி அனுப்பி, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் நிதியும் வழங்கினார். இந்நிலையில் வேலூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த காவலர் கவிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
தொடர்ந்து, காவலர் செய்தி கேட்டு வருத்தமடைவதாகவும், உரிய உதவி அளிக்கப்படும் என்றும் கவிதாவின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின் போது தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் உயரதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
இதையடுத்து கவிதாவின் உடல் அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு தண்டையார்பேட்டையில் இருக்கும் அவரது குடியிருப்புக்கு எடுத்துச்செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவிருக்கிறது. அங்கு காவல்துறை, மற்ற அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியவுடன் உரிய முறையில் அடக்கம் செய்யப்பட இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.