வாரணாசி: காசி விஸ்வநாதர் கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட வளாகம், பனாரஸ் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி நள்ளிரவில் சென்று பார்வையிட்டார். உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி, பிரதமர் மோடியின் சொந்த நாடாளுமன்ற தொகுதியாகும். எனவே, இந்த கோயில் நகரில் பிரத்யேக கவனம் செலுத்தி வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இரண்டு நாள் பயணமாக திங்கட்கிழமை வாரணாசி சென்ற பிரதமர், கால பைரவர் கோயிலில் வழிபட்டார். காசி விஸ்வநாதர் வளாக திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாலை கண்கவர் கங்கா ஆரத்தி மற்றும் படகு துறையில் இருந்து இன்னிசை நிகழ்ச்சியை பார்வையிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு பாதுகாப்பு படையினரால் சூழப்பட்டு, வாரணாசி தெருக்களில் பிரதமர் மோடி நடந்து சென்றார். அவர் சாம்பல் நிற குர்தா, வெள்ளை பைஜாமா, கருப்பு ஜாக்கெட் அணிந்து, தோளில் சாம்பல் நிற மப்ளர் அணிந்திருந்தார். அவரை மக்கள் வரவேற்றனர். பின்னர், தான் திறந்து வைத்த காசி விஸ்வநாதர் வளாகத்தை பார்வையிட்டார்.
பிறகு, பனாரஸ் ரயில் நிலையத்தை பார்வையிட்டார். அவருடன் உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சென்றார். இது குறித்து நள்ளிரவில் மோடி தனது டிவிட்டரில், ‘காசியில் முக்கிய வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்கிறோம். இந்த புனித நகரத்தில் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்குவது எங்கள் முயற்சி’ என்று புகைப்படத்தை பகிர்ந்து கூறியுள்ளார். பின்னர், மற்றொரு டிவிட்டில், ‘அடுத்த நிறுத்தம், பனாரஸ் ரயில் நிலையம். ரயில் இணைப்பை மேம்படுத்தவும், சுத்தமான, நவீன மற்றும் பயணிகள் நட்பு ரயில் நிலையங்களை உறுதி செய்யவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.’ என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் காசி நகரின் குறுகிய சாலைகளில் நகர்ந்து கொண்டிருந்த போது காவி அணிந்திருந்த ஒரு நபர் அவருக்கு அங்க வஸ்திரம் வழங்க அனுமதிக்கப்பட்டார். இதை காரில் இருந்தபடி கை கூப்பி ஏற்றுக் கொண்ட மோடி, புன்னகையுடன் பெற்று கொண்டார். முன்னதாக பாஜ ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.