சென்னை: சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க அமைக்கப்பட்ட சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மேலாண்மைக்குழு முதலமைச்சரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றும்போது, ‘சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், வெள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல், நகர்ப்புற திட்டமிடல், பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், டெல்லி நகர் மற்றும் ஊரமைப்பு நிறுவன தலைமை திட்ட அலுவலர், காலநிலை பின்னடைவு பயிற்சி உலக வள நிறுவன இயக்குநர் நம்பி அப்பாதுரை, சென்னை வளர்ச்சி கல்வி நிறுவனப் பேராசிரியர் ஜானகிராமன், மும்பை ஐஐடி கட்டுமானப் பொறியியல் துறை பேராசிரியர் கபில் குப்தா, சென்னை அண்ணா பல்கலைக்கழக மனித குடியமர்வு மைய இயக்குநர் பிரதீப்மோசஸ், ஐதராபாத்தில் உள்ள தேசிய ரிமோட் சென்சிங் துறையின் பிரதிநிதி, அண்ணா பல்கலைக்கழக ரிமேட் சென்சிங் நிறுவனப் பேராசிரியர் திருமலைவாசன், ஐஐடி கட்டுமானப் பொறியியல் துறை தலைவர் பாலாஜி நரசிம்மன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை திட்ட அதிகாரி, சென்னை மண்டல நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த குழு சென்னையில் வெள்ளப் பாதிப்பை குறைப்பதற்கான ஆலோசனை மற்றும் திட்டங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ள தடுப்பு குழுவுடன் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை பெருநகர் மற்றும் புறநகர் எத்தகைய பெருமழையையும் சீரிய வகையில் எதிர்கொள்ளும் வகையில் உடனே செயல்படுத்த வேண்டிய விரிவான திட்டங்களை உடனே அரசுக்கு வழங்க வேண்டும். சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உட்பட சென்னை வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நீண்டகாலத் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை வழங்க வேண்டும்.
நீர் மேலாண்மைக்கான சிறந்த செயல் திட்டத்தை பகுதி வாரியாகவும், துறை வாரியாகவும் வழங்க வேண்டும். சென்னையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரியான திட்டமிடுதல் தேவைப்படுகிறது. எனவே பகுதி வாரியாக, குறிப்பான ஆலோசனைகள், திட்டமிடுதல்கள் தேவை.இவற்றை உடனே செய்ய வேண்டும். விரைவாக அறிக்கை அளித்தால் விரைவாக திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகளை, அடுத்தமுறை நடக்காமல் தமிழக அரசு தடுத்து விட்டது என்ற பெயரை நாம் எடுத்தாக வேண்டும். எனவே, திட்ட அறிக்கையை விரைவாக துல்லியமாக, நடைமுறை சாத்தியம் உள்ள திட்டமாக தர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குழுவினரிடம் அறிவுறித்தினார்.
இந்நிலையில், வெள்ள நீர் தடுப்பிற்கான திட்ட அறிக்கை மற்றும் ஆலோசனைகள் தயாரிக்கும் பணியை இக்குழு தீவிரமாக மேற்கொண்டு வந்தது. சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று மழை வெள்ளம் வெளியேறாமல் இருப்பதற்கான காரணம் என்ன?, அவற்றை எப்படி சரி செய்யலாம். மேலும், எந்த மாதிரியான திட்டங்களை செயல்படுத்தினால் வரக்கூடிய காலங்களில் சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்கலாம் குறித்து இக்குழு ஆலோசனை மேற்கொண்டு திட்ட அறிக்கையாக தயார் செய்துள்ளது. இந்த அறிக்கையை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இக்குழு நாளை வழங்க உள்ளது.