லக்னோ:
உத்தரபிரேச மாநில சட்ட சபைக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
முதல் கட்ட தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக பொதுக் கூட்டங்கள் நடத்தி பிரசாரம் செய்ய முடியாத நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே காணொலி காட்சி மூலமாகவும், வீடு வீடாக சென்று ஆத ரவு திரட்டி வருகிறார்கள்.
மத்திய உள் துறை மந்திரி அமித் ஷாவும் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதியில் அவர் தீவிர கவனம் செலுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதி பா.ஜ.கவின் கோட்டையாக கருதப்படுகிறது. அங்குள்ள 108 தொகுதிகளில் 83 தொகுதிகளை கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலின் போது பாரதிய ஜனதா கைப்பற்றி இருந்தது.
எனவே அந்த தொகுதிகளில் அமித் ஷா முற்றுகையிட்டுள்ளார். இன்று அவர் சாம்லி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார்.
அமித் ஷா வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். பின்னர் பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதையடுத்து மீரட் நகருக்கு சென்ற அவர் கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பிரபலங்களை சந்தித்து உரையாடினார்.
இன்று பிற்பகல் கஜ்ராலா நகருக்கு சென்று பிரசாரம் செய்கிறார். அவருடன் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்தியநாத், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் சென்றனர்.