பனாஜி,
கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
அதன்படி, உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாகவும், மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாகவும், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
கோவாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தற்போது தேர்தலுக்கான பிரச்சார பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கோவா சென்றுள்ளார்.
கோவாவில் உள்ள மாயேம் சட்டமன்ற தொகுதியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், அங்குள்ள மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து வாக்கு சேகரித்தார். மேலும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பாஜகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து சகாலி பஜார் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த கூட்டத்தில் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் பங்கேற்கிறார். பிரமோத் சாவந்த் பாஜக சார்பில் சான்குவெலிம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.