உலக செஸ் அரங்கில் முதல் நிலை வீரரும் உலக சம்பியனுமான நோர்வேயின் மெக்னஸ் கார்ல்சனை கருப்பு நிற காய்களைக் கொண்ட ஒன்லைன் செஸ் போட்டியில் எதிர்த்தாடிய இந்தியாவின் 16 வயதுடைய செஸ் க்ராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா அபார வெற்றியீட்டி பலத்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.
இப் போட்டியின் 39ஆவது நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா வெற்றியீட்டினார்.
2016ஆம் ஆண்டு தனது 10ஆவது வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை பெற்றதன் மூலம் மிக இள வயதில் சர்வதேச மாஸ்டரான (இன்டர்நெஷனல் மாஸ்டர்) பிரக்ஞானந்தா, நேற்று பிற்பகல் நடைபெற்ற ஏயார்திங்ஸ் மாஸ்டர்ஸ் விரைவு (ரெப்பிட்) செஸ் போட்டியில் கார்ல்சனை வெற்றிகொண்டார்.
கார்ல்சனை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பென்டாலா ஹரிகிருஷ்ணா ஆகியோரும் இதற்கு முன்னர் வெற்றிகொண்டுள்ளனர். ஆனால், 2013இல் உலக சம்பியனான பின்னர் கார்ல்சனை மிக இளவயதில் வெற்றிகொண்டவர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுக்கொண்டுள்ளார்.
‘எமது ஆற்றல்கள் எப்போதும் பெருமை தருகின்றது. பிரக்ஞாவுக்கு மிகவும் நல்ல நாள்’ என ஐந்து தடவைகள் உலக சம்பினானவரும் இந்தியாவில் உருவான மிகச் சிறந்த செஸ் வீரருமான ஆனந்த தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையை பிறப்பிடமாகக் கொண்ட பிரக்ஞானந்தாவுக்கு இந்தியாவின் இரட்டை கிரிக்கெட் துடுப்பாட்ட உலக சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கரும் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினும் பிரக்ஞானந்தாவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.