மணிப்பூரில் கடந்த மே மாதம் 4ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான இராணுவ வீரர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
“திடீரென வந்த வன்முறை கும்பல் 2 அல்லது 3 பெண்களை தனியாக அழைத்து சென்றது. அதில் ஒருவர் என் மனைவி. அவர்களின் ஆடையை வலுக்கட்டாயமாக கழட்ட சொன்னது அந்த வெறியாட்ட கும்பல். அப்போது அவர்களை காப்பாற்ற கிராம மக்கள் வந்தனர்.
ஆனால் அந்த கும்பல் என் கண் முன்னே என் தந்தையை சுட்டுக்கொன்றது. நாட்டிற்காக கார்க்கில், இலங்கை சென்று பணியாற்றியுள்ளேன்.
ஆனால் எனது மனைவி, தந்தையை காப்பாற்ற முடியவில்லை. அந்த கும்பலுடன் பொலிஸூம் இருந்தனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த வன்முறை வெறியாட்டம் நின்று விட்டதாக நினைக்கவில்லை. இது எதிர்காலத்திலும் தொடரும் என்ற அச்சம் உள்ளது.
அந்த கலவரக்கும்பலுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி அடங்கிய இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.