மணிப்பூரில் கடந்த மே -3 ஆரம்பமாகிய கலவரம் இன்று வரை அமைதி காணா நிலையில் உள்ளது .
மனித உரிமை மீறல் பல மடங்கு நடைப்பெற்ற வண்ணம் உள்ளது .மெய்தி -குகி ஆகிய சமூகங்களுக்கிடையிலேயே இந்த வன்முறை சம்பவம் நடைபெற்று வருகிறது இதுவரை 160 பேர் பலியாகி உள்ளனர்.
1000க்கும் மேற்பட்டோர். அகதி முகாம்களிலும் 100க்கும் மேற்பட்டவர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். பல சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது .இவை இதுவரை ஊடகங்கள் வாயிலாக அறிய கிடைத்த தகவலாகும்.
மேலும் தொடர்ச்சியாக நேற்று ஹரோதெல், சென்ஜம் உள்ளிட்ட இடங்களில் வன்முறைகள் வெடித்தது. வன்முறை கும்பல்களை ஒடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.
பிஷ்ணுபூர் மாவட்டம் உகா தம்பக் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத கும்பல் புகுந்தது. அவர்கள் வீடுகளில் இருந்தவர்களை ஆயுதங்களால் தாக்கியும் துப்பாக்கியாலும் சுட்டு விட்டு ஓடிவிட்டது. இதில் தந்தை- மகன் மற்றும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இறந்தனர்.
கவுகட்டாவில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் குகி சமூகத்தினர் வசித்து வரும் கிராமத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த வீடுகளை சூறையாடி தீ வைத்தது. இந்த சம்பவத்தில் பல வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.
இந்த பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி இந்த தீ வைப்பு சம்பவம் எப்படி நடந்தது? என்று தெரியவில்லை. நேற்று 6 மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதையொட்டி துப்பாக்கி சூடு, தீ வைப்புகளும் நடந்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அப்பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பிஷ்ணுபூரில் உள்ள பாதுகாப்பு படை ஆயுத கிடங்கிற்கு சென்ற கும்பல் அங்கு வைக்கப்பட்டு இருந்த 298 துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள், வெடி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டது.
இந்த செயலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் வன்முறை சம்பவங்களை கண்டித்தும், உடனே சட்டசபையை கூட்டி இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரியும் மணிப்பூர் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 27 சட்டசபை தொகுதிகளில் இன்று ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பில் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று இந்த பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.
பெரும்பாலான பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஓடவில்லை. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் ரோடுகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.