மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இன்று நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதில் அளித்தார். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுவதாக கூறினார் பிரதமர் மோடி.
மேலும் மக்கள் தங்களின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று கூறிய பிரதமர் மோடி , 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து பாஜக கூட்டணி வபாஜக வரலாறு காணாத வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் கூறினார். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசிய பிரதமர் மோடி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை நோ பால் என விமர்சித்தார்.
ஒரு முறை நோ பால் வீசினால் பரவாயில்லை நீங்கள் ஏன் மீண்டும் மீண்டும் நோ பால் வீசுகிறீர்கள் என்றும் கிண்டலாக கேட்டார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் அதிர்ஷ்டமே இல்லை என்றும் நக்கலடித்தார் பிரதமர் மோடி. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை தான் கவனித்து வருவதாகவும், ஒரே ஒரு நாள் மட்டுமே எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற அலுவல்களை மேற்கொள்ள அனுமதித்ததாகவும் தெரிவித்தார்.
ராகுல் காந்தி ஏன் பேசவில்லை என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, தங்களின் அரசு சதம் அடிக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் நோ பால் வீசுகின்றன என்றும் சாடினார். 5 ஆண்டுகள் கொடுத்தும் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் அமர தயாராகவில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.