இலண்டன் பல்கலைக்கழகத்தின் SOAS வளாகத்தில் தமிழ்த்துறையை மீள உருவாக்கும் பெரும் பணி இலண்டனில் நடைபெற்று வருகின்றது. உலகின் பழைமை வாய்ந்த மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இலண்டன் பல்கலைக்கழகத்தில் 1916ம் ஆண்டு பல மொழிகளைக் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் தமிழுக்கும் ஒரு இடம்கிடைத்து தமிழ்த்துறை இயங்கிவந்துள்ளது. பிரித்தானிய அரச நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டதால் சுமார் இருப்பது வருடங்களின் முன் தமிழ்த்துறை இயங்காமல் நின்றுள்ளது. அதனை மீள உருவாக்கும் முயற்சியில் தமிழர்கள் இறங்கியுள்ளனர்.
தமிழ்த்துறை உருவாக்கத்துக்காக பல்வேறுபட்ட முயற்சிகள் பல தளங்களில் முன்னெடுக்கப்படுகின்ற வேளையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முத்தமிழ் விழா நடைபெற உள்ளது. பிரித்தானியாவில் உள்ள சுமார் ஐந்து தமிழ்ப் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் தமது நிகழ்வுகளை அரங்காட உள்ளார்கள். புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் தமது வாழ்வியலை அமைத்துவரும் வேளைகளில் தமது மொழி, கலாசாரம் மற்றும் தமது பாரம்பரியங்களை பேணிப் பாதுகாப்பதில் முனைப்புக் காட்டிவரும் வேளையில் இவ்வாறான நிகழ்வுகள் தமிழ்த்துறையை நிறுவுவதற்கு துணைநிற்கின்றன.