இங்கிலாந்து அரசாங்கத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை முன்மொழியப்பட்ட புதிய புகலிடச் சட்டம், “மிகவும் கவலைக்குரியது” என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறியுள்ளது.
அத்துடன், கட்டாயம் புகலிட உரிமை கோரப்பட வேண்டியவர்களைக் கூட அது தடுக்கும் என்றும் ஐ.நா அகதிகள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகத்தின் (UNHCR) பிரதிநிதியான விக்கி டெனன்ட் பிபிசியிடம் வழங்கிய நேர்காணலில், “இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் திட்டங்கள் “குழப்பத்தை மேலும் மோசமாக்கும்” அபாயம் இருப்பதாக இங்கிலாந்தின் தொழிற்கட்சி கூறியுள்ளது.
அதேவேளை, புதிய புகலிடத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சட்டரீதியான சவால்களை சமாளிப்பதற்கு தான் தயாராக உள்ளதாக, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.