செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சர்வதேச மகளிர் தினம் – வட மாகாண முதலமைச்சர் வாழ்த்துச்செய்தி 

சர்வதேச மகளிர் தினம் – வட மாகாண முதலமைச்சர் வாழ்த்துச்செய்தி 

4 minutes read

இன்றைய நிகழ்வை தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற கௌரவ மகளிர் விவகார அமைச்சர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களே, இந்த நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகைதந்திருக்கின்ற கௌரவ விருந்தினர்களே, சிறப்பு விருந்தினர்களே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் கிளிநொச்சியில் நடைபெறுகின்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் நானும் கலந்து கொள்வேன் என்ற நம்பிக்கையில் கௌரவ அமைச்சர் அவர்கள் எனது பெயரை பிரதம அதிதியாக குறிப்பிட்டுவிட்டார். நானும் மறுப்புத் தெரிவிக்கவில்ல. ஏனெனில் வருடா வருடம் இந்த தினத்தில் நான் மகளிர் தின நிகழ்வுகளில் பங்குபற்றுவது வழக்கம். எனினும் பிறிதோர் அவசர நிகழ்வு தொடர்பாக இன்றைய தினம் கொழும்புக்குச் செல்ல வேண்டிய நிலையில் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போனமை துரதிர்ஷ்டமே. எனினும் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாத போதும் ஒரு செய்தியையாவது அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த வாழ்த்துரையை அனுப்பி வைக்கின்றேன்.

சகோதர சகோதரிகளே! இந்த மார்ச் 8ம் தேதி எவ்வாறு மகளிர் தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். சிலர் அறிந்திருக்கமாட்டீர்கள். நியூயோர்க் நகரில் 1882ம் ஆண்டில் ஒரு பஞ்சு ஆலையில் கடமைபுரிந்த ஆண் பெண் இருபாலாருக்கும் சம அளவிலான சம்பளக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற போராட்டத்தில் பெண்கள் இறங்கியிருந்தனர். இந்தப் போராட்டம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வரை நீடித்து அந்த பஞ்சு ஆலைக்குள்ளேயே சுமார் 75 பெண்கள் உயிரை மாய்த்த பின்பே 1910ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி அவர்களின் சம்பளங்கள் சரிநிகர் சமானமாக வழங்குவதற்கு அந்த நிர்வாகம் ஒத்துக் கொண்டது. அந்த வெற்றியை கொண்டாடும் முகமாகவே மார்ச் 8ம் தேதி மகளிர் தினமாக உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.

இன்றைய தலைமுறைக்கு மகளிர் ஒடுக்கு முறை பற்றி முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று ஆண்களுக்கு சமானமாக பெண்களும் கல்வி கற்கின்றார்கள். ஆண்கள் தொழிலுக்குச் செல்வது போல பெண்களும் தொழிலுக்குச் செல்கின்றார்கள். சமையல் கூடத்தில் ஆண் பெண் இருபாலாரும் இணைந்து வேலை செய்கின்றார்கள். இப்படி எல்லா விடயங்களிலும் சமானமாக கையாளப்படும் போது பெண் விடுதலை பற்றி ஏன் கூடுதலாக விமர்சிக்கிறார்கள் என்ற கேள்வி இளையோர் சிலர் மனதில் எழக் கூடும்.

பெண் விடுதலைக்கு முதன்முதலில் குரல் கொடுத்தவன் புரட்சிக் கவிஞன் பாரதி என்றே கூறலாம்.

‘நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை

ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை’ என்றான் பாரதி. அதாவது ஆண்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் ஓய்வாக அமர்ந்திருந்து புதினப் பத்திரிகை, செய்தித் துணுக்குகள், இலக்கிய நூல்கள் என்பவற்றுடன் பொழுதைக் கழிப்பார்கள். ஆனால் பெண் என்பவள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வீட்டைப் பெருக்கி, உணவு சமைத்து, வீட்டில் இல்லாத சாமான்கள் வேண்டி, கணவனின், பிள்ளைகளின், தனது உடைகளைத் தோய்த்து மேலும் பல வேலைகளில் ஈடுபடுவார். ஒருவாறு மதிய உணவை உட்கொண்ட பின்னர் மீண்டும் அடுத்த நாள் விடியற்காலையில் என்ன உணவு சமைப்பது என்ற சிந்தனை அத்துடன் பிள்ளைகளைப் பராமரிப்பது, அவர்களின் உடைகளை மடித்தெடுத்தல் போன்ற கடமைகளில் முழுப்பொழுதையும் கழித்து ஓய்வு ஒழிவு இன்றி வாழுகின்றாள் பெண் என்று கூறாமல் கூறுகின்றான் பாரதி.

உரிமைகள் அற்ற ஒருவருக்கு அதாவது நலிந்தவருக்கு எவ்வாறு நாளும் கோளும் இல்லையோ அது போன்றே பெண் என்பவளுக்கும் அதே நிலை தான் என்பதனையே மேலே குறிப்பிடுகின்றார். இன்றைய கால கட்டத்தில் பெண்கள் வேலைக்கு செல்கின்றார்கள். மாலையில் வீடு திரும்புகின்றார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் கடமைக்குச் செல்லும் போதும் கடமைபுரியும் வேலைத்தளத்திலும் கடமைமுடிந்து வீடு திரும்பும் போதும் பெண் எனப்படுபவள் படுகின்ற துன்பங்கள், அவமானங்கள், தலைக்குனிவுகள், வெளியில் எடுத்துச் சொல்ல முடியாதிருக்கின்றன. அவற்றை ஜீரணிக்க முடியாமல் தனக்குள்ளே அமிழ்த்தி வைத்து அவள் படுகின்ற வேதனை சொல்லொண்ணாதது. அதே போன்று தற்செயலாக வேலைத்தளத்தில் சற்று கூடிய வேலைப்பழு காரணமாக அதிக நேரம் செலவழித்துவிட்டு சற்றுத் தாமதமாக இருட்டிய பின்னர் ஓடி ஓடி பேரூந்தைப் பிடித்துவந்து வீட்டுக்கு அண்மையில் உள்ள பஸ் தரிப்பில் இறங்கி தனியாக சுற்றும் முற்றும் பார்த்து பயந்த சுபாவத்துடன் வீட்டிற்கு ஓடிச் சென்றால் அங்கே சினத்துடன் காவலிருக்கின்ற கணவனை சமாதானம்; செய்வது பெரும் பாடாகிவிடுகிறது. அதன்பின் குழந்தைகளின் பசியைப் போக்க தேநீர் தயாரித்து இரவு உணவு தயார் செய்து பல பல வேலைகளில் ஈடுபட வேண்டியுள்ளது. இவ்வாறாக அவளின் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிப்புடையதாகவே கழிக்கப்படுகின்றது.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் கல்வி கற்கும் உரிமையைப் பெற்றிருக்கவில்லை. சில பெண்கள் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கின்ற போது பருவம் எய்தி விட்டால் அன்றில் இருந்து படிப்புக்கு முழுக்கு போட்டு விடவேண்டியிருந்தது. பெண் எனப்படுபவள் வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்வதற்கும் உணவு சமைப்பதற்கும் துணி துவைப்பதற்கும் பிள்ளைகளை பெற்றுக் கொடுப்பதற்குமான ஒரு இயந்திரமாகவே கருதப்பட்டாள். ஆரம்பத்தில் வாக்களிக்கும் உரிமை கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இன்றைய நிலையில் கூட பொதுத் தேர்தல்களில் பெண் அங்கத்துவம் 25மூ கட்டாயமாக இருக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றப்பட்டுள்ள போதும் அந்த அளவுக்கு அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பெண்கள் இன்னமுந் தம்மை தயாராக்கிக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

முன்னர் இருந்த பாலியல் விவாகம் போன்றவை இப்பொழுது எம்மை விட்டு அகன்றுவிட்ட போதும் பெண் எனப்படுபவள் ஒரு ஆணின் துணையுடன் தான் வாழ வேண்டும் என்ற ஒரு கட்டுக்கோப்புக்குள் தள்ளப்பட்டுள்ளாள். குழந்தையாக பிறந்த தினத்தில் இருந்து மணம் முடித்துக் கொடுக்கும் வரை தந்தையின் கவனிப்பில் அவரின் சொற்படி வாழுகின்றாள். திருமணம் முடித்த தினத்தில் இருந்து கணவனின் சொல் கேட்கிறாள். பின்பு பிள்ளைகள் வளர்ந்த பின் ஆண்மகனின் சொற்படியே இறக்கும் வரை தமது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிச் செல்கின்றனர் பெரும்பாலான மகளிர்.

மகளிர் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நிரந்தர அபிவிருத்திக் குறிக்கோள்கள் என்றவற்றின் ஐந்தாவது குறிக்கோளின் கீழ் இன்றைய நிலையும் இனிவருங்கால நிலையும் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘உலகமானது பாலியல் சமத்துவம் சம்பந்தமாகவும் பெண்களுக்கான ஆற்றலளித்தல் சம்பந்தமாகவும் ஆயிரம் ஆண்டுகால அபிவிருத்திக் குறிக்கோள்களின் கீழ் ஆண் பெண் ஆரம்பக்கல்விக்கான நுழைவுரிமை  உட்பட பல விடயங்களில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் பெண்களும், பெண் பிள்ளைகளும் உலகம் பூராகவும் வேறுபடுத்தலுக்கும் வன்முறைக்கும் இன்றும் ஆளாகியே வருகின்றனர். பாலியல் சமத்துவம் என்பது அடிப்படை மனித உரிமை மட்டுமல்ல சமாதானமும், வளமும் நிறைந்த நிரந்தர உலக வாழ்விற்கு அத்தியவசியமான அடித்தளமும் ஆகும்.  எனவே கல்வி, சுகாதாரம், தகுந்த வேலை, அரசியல், பொருளாதார ரீதியாக முடிவெடுக்கும் செயல் முறையில் பங்குபற்றல் போன்றவற்றில் பெண்களுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் சம நுழைவுரிமை வழங்குதல் மனித குலத்தின் நிரந்தர பொருளாதார விருத்திக்கும் சமூக நலனுக்கும் வழி அமைப்பன.’ என்று கூறுகின்றது மேற்படி ஐந்தாவது குறிக்கோள்.

பெண் என்பவள் இன்று எம்மிடையே நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 16 மணித்தியாலங்கள் வேலை செய்கின்றாள். கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றாள். வீட்டு வேலைகளையும் நிறைவு செய்கின்றாள். ஒரு பன்முக தோற்றத்தையுடையவளாக அவள்  இன்று திகழ்கின்றாள். அவ்வாறான பெண் தான் கடமைபுரியும் இடத்தில் போதிய பாதுகாப்புடன் வலம்வர அனுமதிக்கப்பட வேண்டும். இரவு வேளைகளில் வீதியிலும் அரச பொதுப் போக்குவரத்துக்களிலும் எதுவித பயமும் இன்றி சென்றுவரக்கூடிய ஒரு நிலை ஏற்பட வேண்டும். அவ்வாறான சுதந்திரமும் மதிப்பும் 2009ம் ஆண்டுக்கு முன்னர் வடபகுதியில் பெண்களுக்குக் கிடைத்தது. அந்த நிலை மீண்டும் கிடைக்கப்பெற வாழ்த்தி எனது வாழ்த்துரையை நிறைவுசெய்கின்றேன்.

நன்றி. வணக்கம்

 

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்,

முதலமைச்சர்

வடமாகாணம்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More