நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்கவின் ராஜாங்கத் திணைக்களத்தின் ஆசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸை சந்தித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 37வது அமர்வில் இலங்கை குறித்த வருடாந்த அறிக்கையை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் முன்வைக்கின்ற நிலையில், நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சுமந்திரன், அங்கு பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன்படி அவர் மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்காவின் உதவி தூதுவர் கெலி கரி மற்றும் ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிப் பொதுச் செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் ஆகியோரை சந்தித்திருந்தார். இந்தநிலையில், அலிஸ் வெல்ஸை சந்தித்த போது, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்கு ஒத்த, இலங்கை மீதான கடுமையான நிலைப்பாட்டை அமெரிக்கா கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை சுமந்திரன் முன்வைத்துள்ளார்.