கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்ட காலமாக சமூகப்பணி செய்துவரும் முன்னாள் கிளி மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளரும், கானான் தொண்டு அமைப்பின் தலைவரும், வட மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சருமாகிய குருகுலராஜா அவர்கள் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் “மண்ணின் மைந்தன்” விருதினைப் பெற்றுள்ளார்.
கிளிநொச்சி பரந்தனில் நீண்டகாலமாக இயங்கிவரும் நவஜீவனத்தின் இயக்குனரான மறைந்த கிருபா அவர்களின் சகோதரரான இவர் தர்மபுரத்தில் கானான் தொண்டு அமைப்பிணை செயல்படுத்தி வந்துள்ளார். ஆசிரிய சேவையில் இணைந்து பின்னர் கிளிநொச்சி மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெற்றுள்ளார்.
கிளி மாவட்ட மக்கள் அமைப்புடன் கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்துவரும் இவர் முள்ளிவாய்காலுக்குப் பின்னான காலத்தில் முடங்கிக்கிடந்த மக்களின் உடனடி உதவிகள் மற்றும் மீள்குடியேற்ற காலப்பகுதியில் தற்காலிக உதவிகள் மற்றும் கல்வி, மருத்துவம், பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை Kilipeople UK charity அமைப்பு நடைமுறைப்படுத்தி வந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இன்றுவரை கிளி மாவட்ட மக்கள் அமைப்புடன் தோளோடு தோள் கொடுத்து செயல்பட்டு வருகின்றார்.
கிளிநொச்சி பிரதேசத்தில் அவரது தொடர் தொண்டர் சேவையை பாராட்டி இவ்வருடத்திற்கான “மண்ணின் மைந்தன்” விருது கிளி மாவட்ட மக்கள் அமைப்பினால் 24/8/2018 அன்று இலண்டனில் வைத்து வழங்கி கெளரவிக்கப்பட்டது.