இன்று காலை இலங்கையின் தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களின் பின்னனியில் யார் உள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்தாத பல ஊகங்கள் வெளிவந்தவாறு உள்ளது.
கொழும்பு ஊடகங்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் குறிப்பிட்ட தேவாலையங்கள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றில் குண்டுவெடிப்புகள் இடம்பெறலாம் என்ற எச்சரிக்கை இம்மாதம் 11ம் திகதி விடுக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இலங்கை போலீஸ் மா அதிபர் ஏற்கனவே இந்த எச்சரிக்கையை 11ம் திகதி விடுக்கப்பட்டபோதும் அதனை தடுப்பதற்கு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
தொடர் குண்டுவெடிப்புகள், குறிப்பிட்ட நேரம், கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை நாள் அதுவும் இலங்கையில் ஒருமித்த வழிபாட்டு நேரம். இது திட்டமிட்டு நேர்த்தியாக செய்யப்பட்ட தாக்குதலாக கருதப்படுகின்றது. கிறிஸ்தவர்களையும் வெளிநாட்டு பிரஜைகளையும் குறிவைக்கப்பட்டுள்ளது. நேர்த்தியாக திட்டமிடும் ஒரு குழு அல்லது அமைப்பு இதன் பின்னணியில் இருந்தால் அவ் அமைப்பு இலங்கையில் ஆழ வேரூன்றியுள்ளதா என்ற அச்சத்தை தற்போது ஏற்படுத்துகின்றது.
விடுதலைப் புலிகளுடனான போரினை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கும் ஆட்சியாளர்கள் அந்த போரினை வெற்றிகொள்ள அனைத்து நாடுகளிலும் நிபந்தனையற்ற உதவிகளை பெற தமது கதவுகளை திறந்து விட்டிருந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களையும் அதன் பின்னணியில் பார்க்கவேண்டியுள்ளது. ஏப்ரல் 11ம் திகதி வந்த எச்சரிக்கை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் மீதும் விடுக்கப்பட்டுள்ளதை இந்த நேரத்தில் கவனிக்கப்பட வேண்டும். தாக்குதல் செய்தவர்களுக்கு பிரதான குறிக்கோளாக இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் இருந்திருக்கலாம், தாக்குதல் எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்புக்கள் பலப்படுத்தியதால் தப்பித்ததா அல்லது அவர்களுடைய இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவர்களை காப்பாற்றியதா என்ற கேள்வி எழுகின்றது.
பிரதமர் ரணில் தனது செய்தியில் நாட்டு மக்களை ஒற்றுமையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். முக்கிய அமைச்சர்கள் சரியான தகவல்கள் இல்லாத செய்திகளை தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் இலங்கையின் உயர் பீடம் குழப்பத்தில் உள்ளது என்பதைவிட பீதியில் உள்ளதென்பதே பொருத்தமாக இருக்கும்.
வணக்கம் இலண்டனுக்காக வந்தியத்தேவன்