இலண்டன் மெட்ரோ வங்கியின் நிதி நிலமை தொடர்பாக பி பி சி இணையத்தளம் வர்த்தக பிரிவின் கீழ் வெளியிட்ட செய்தியினைத் தொடர்ந்து இலண்டனில் வாழும் தமிழர்கள் வங்கியில் உள்ள தமது பாதுகாப்புப் பெட்டிகளை நினைத்து பதட்டமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள முன்னணி வங்கிகள் தமது சேவைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பாதுகாப்புப் பெட்டிகளை வைத்திருக்கும் நடைமுறையை குறைத்து வரும் நிலையில் மெட்ரோ வங்கி இந்த சேவையை அறிமுகப்படுத்தி விரிவாக்கம் செய்துள்ளது. 2010ம் ஆண்டு இலண்டனில் வேர்ணன் கில் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இவர் அமெரிக்காவில் கமர்சியல் வங்கியை 1973ம் ஆண்டு ஆரம்பித்து 2007ம் ஆண்டு 440 கிளைகளுடன் சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்றுள்ளார். பின்னர் மூன்று ஆண்டுகளில் இலண்டனில் மெட்ரோ வங்கியினை ஆரம்பித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள சுயாதீன நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி பெருமளவான வங்கித் துறைகளில் இரண்டாம் இடத்தில் இந்த வங்கி காணப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழர்களின் பெரும்பாலானோர் மெட்ரோ வங்கியில் தமது விலைமதிப்புள்ள ஆபரணங்கள் மற்றும் பத்திரங்களை வங்கியில் எடுக்கும் பாதுகாப்புப் பெட்டிகளில் வைத்துள்ளனர். அண்மைக்காலங்களில் இலண்டனில் தமிழர் வீடுகளில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களால் பெருமளவான தமிழர்கள் பாதுகாப்புப் பெட்டிகளை பாவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
பி பி சி செய்தியாளர் சைமன் ஜாக் எழுதிய செய்தியைத் தொடர்ந்து தமிழர் மத்தியில் சமூகவலைத் தளங்களில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்கள் பரிமாறிய வண்ணம் உள்ளது. எவ்வாறு இருந்தாலும் பாதுகாப்புப் பெட்டிகளை வாடகைக்கு மாத்திரமே எடுக்கப்படுகின்றது. வங்கி உள்ளே இருப்பதை பாவிப்பதில்லை எனவே பயப்படதேவியில்லை என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.