வங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 23 ரோஹிங்கியா இளம்பெண்களை மனித கடத்தல் கும்பலமிடமிருந்து வங்கதேச காவல்துறை மீட்டுள்ளது.
வங்கதேசம்- மியான்மர் எல்லையோரம் அமைந்துள்ள அகதிகள் முகாமிலிருந்து தலைநகர் டாக்காவுக்கு இப்பெண்களை 4 பேர் கொண்ட மனித கடத்தல் கும்பல் அழைத்து வந்துள்ளது. இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு ரோஹிங்கியா இணையரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வங்கதேச காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த மே 11ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 50 வங்கதேச கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டாக்காவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட பொழுது, மறைந்திருந்த இப்பெண்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையின் பேச்சாளர் மோக்லெசூர் ரஹ்மான் கூறியிருக்கிறார்.
“மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி காக்ஸ் பஜார் முகாமிலிருந்து இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்,” என ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.