செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஊடக அறிக்கை.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஊடக அறிக்கை.

2 minutes read

ஆட்சிமாற்றங்கள் இடம்பெற்றுவருகின்றபோதும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்க்கையிலோ அல்லது அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் மனநிலையிலோ மாற்றங்கள் ஏற்பட்டதாக இல்லை.

ஆனால் தற்போது முழு நாடுமே கொரோனா வைரஸின் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக சிறைக்கைதிகள் அனைவருமே இந்த வைரஸின் தாக்கம் ஏற்பட்டுவிடும் என்ற பதற்றமான மனநிலையுடன் அண்மைய நாட்களை கழித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் பாரிய குற்றங்களை இழைத்த குற்றவாளிகள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்படவர்களின் சிறைக்கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் தமக்கான சிறைக்கூடங்களை சரியாக பராமரித்து சுத்தமாக பேணிவந்த நிலையில் அவர்களை வேறுகூடங்களுக்கு மாற்றி நெருக்கடியான சூழலில் வைக்கப்பட்டமையானது கண்டிக்கத்தக்கதாகும்.

நேற்றையதினம் அநுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களால் தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயங்கரவாத தடைச்சாட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர்களின் வாழ்க்கையில் அரைவாசிக்கும் அதிகமான காலத்தினை சிறைகளிலேயே கழித்துள்ள நிலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது விடுதலையை வலியுறுத்தியபோதும் அவை பாராமுகமாகவே இருக்கின்றது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டும் அவர்களின் உயிர்ப்பாதுகாப்பினை கவனத்திற்கொண்டும் தற்காலிகமாக நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபயராஜபக்ஷ தலைமையிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறான நடவடிக்கையொன்றே தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்பாதுகாப்பினை உறுதிப்படுத்தவதாகவும் அவர்களின் வருகைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் அன்புக்குரிய உறவுகளுக்கு நிம்மதி அளிப்பதாகவும் இருக்கும்.

கொரோனாவின் தாக்கம் உலகளாவிய ரீதியில் அதிகரித்தபோது, ஈரான் அரசு தனக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள், போராட்டங்களை நடத்திய குற்றச்சாட்டில் சிறையில் அடைத்திருந்த ஆயிரக்கணக்கானவர்களை நிபந்தனையின் அடிப்படையில் விடுவித்தது.

மேலும், இத்தாலி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உயிர் அச்சம் காரணமாக சிறைக்கைதிகள் போராட்டங்களை முன்னெடுத்தமையால் பதற்றமான சூழலும் ஏற்பட்டிருந்தது. ஆகவே இவ்வாறான முன்னுதாரணங்கள் தொடர்பில் கரிசனை கொண்டு உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு கோருகின்றேன்.

சிவசக்தி ஆனந்தன் மு.பா.உ
பொதுச் செயலாளர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More