எமது மண்ணினதும் இனத்தினதும் வரலாற்று அடையாளங்களை சிதைப்பதற்கோ மாற்றுவதற்கோ நாம் எவருக்கும் இடமளிக்க முடியாது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.தம்பகாமம் பகுதியில் மக்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்எமது மண்ணின் தொல்பொருள் அடையாளங்களை கையகப்படுத்தும் வகையிலே கோத்தபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள தொல்லியல் செயலியின் உறுப்பினரில் ஒரு தேரர் திருகோணமலை தங்களுடையது என்கிறார் நல்லூர் தங்களுடையது என்கிறார். இவை எல்லாம் சிங்கள தேரர்கள் கூறுகின்றபோது கோத்தபாய அரசிற்கு ஆதரவு கொடுந்பவர்களின் ஆசிர்வாதத்துடனே நடைபெறுகிறது.இதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
எமது இனம் எமது இருப்பை தக்கவைப்பதற்காகவும் அரசியல் தீர்விற்காகவும் இந்த மண்ணிலே 70 ஆண்டுகளுக்கு மேலாக போராடிக்கொண்டிருக்கிறோம். ஆயினும் சிங்கள அரசு எமது இனத்தின் வரலாற்றை அழிப்பதற்கு திட்டமிட்டு செயற்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக கடந்த அரசு எமது மண்ணினுடைய வராலாறுகளை மாற்றுவதில் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். குறிப்பாக கிளிநொச்சி மண்ணிலே கிளிநொச்சி டிப்போச்சந்தியில் உள்ள இராணுவ நினைவுச்சின்னத்திலே பழமைவாய்ந்த கற்களை வைத்து அந்த நினைவுச்சின்னத்தை கட்டியெழுப்பியிருப்பதன் நோக்கம் தான் என்ன? இதற்குப்பின்னால் வரலாற்றை மாற்றி அவர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வரலாற்றை எழுத சிங்கள அரசு விரும்புகிறது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமுடியாது.
இவற்றை கருத்தில்க்கொண்டே எமது தலைவர் பாடசாலைகளில் தமிழீழ வரலாறு என்கின்ற பாடத்தை பாடசாலைகளில் அறிமுகப்படுத்தியிருந்தார். சிங்கள அரசுகள் மட்டுமல்ல எம்மினத்தின் அடையாளங்களை அழிக்கவில்லை. இந்த அரசோடு இருக்கும் எம் இனத்தின் புல்லுருவிகளும் சிங்கள அரசு விரும்பியது போன்று கிளிநொச்சி மண்ணின் வரலாற்றை மாற்றி எமது இனத்திற்கு பெரும் துரோகம் இழைத்திருக்கிறார்கள். எமது அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் இன்னும் எத்தனையோ சமர்க்கள நாயகர்களை வைத்து அஞ்சலி செய்த கூட்டுறவாளர் மண்டபத்தை மஹிந்தராஜபக்சவின் புதல்வன் திறந்து வைத்துள்ளதாக நினைவுக்கல்லில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவை எல்லாம் எம் இனத்தின் புல்லுருவிகளின் துரோகத்தனத்துடனும் ஆசிர்வாதத்துடனே நடைபெற்றிருக்கிறது. மலையக மக்கள் முன்னணியினுடைய தலைவர் முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட மத்தியகல்லூரியின் பிரதான மண்டபம் தமது தேவைக்கு ஏற்றவாறு தங்களால் திறந்து வைக்கப்பட்டது என நினைவுக்கல்லில் பெயர்களை செதுக்கியிருக்கிறார்கள். இவை எல்லாம் எமது அடுத்த தலைமுறைக்கு எமது வரலாற்றை தெரியவிடாது தடுத்து இந்த நாட்டிலே சிங்கள பௌத்த மேலாண்மையை நிறுவ நினைக்கிற சிங்கள அரசுக்கு துணைபோகும் செயற்பாடுகளே இவையாகும்.
நடைபெறப்போகும் தேர்தல் என்பது வெறும் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலாக நாம் நோக்க முடியாது.இந்தத் தேர்தல் எமது இனத்தின் இருப்புக்கான தேர்தல் எமது வரலாற்று அடையாளங்களை காப்பதற்கான தேர்தலாக நாம் நோக்க வேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உபதவிசாளர் கயன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர்கள் அமைப்பாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.