திருகோணமலை பன்குளம் பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பெண் வைத்தியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா ஐக்கிய தேசிய கட்சி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எனவும் தற்பொழுது திருகோணமலை சோனகவாடி பகுதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரியாய் சந்தியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை ,அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை இன்று (14) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், குறித்த பிரதேசத்தில் ஏற்கனவே கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் தூர இடங்களில் இருந்து வருகை தந்த வைத்தியர்களினால் இடமாற்றம் பெறுவதற்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.