இந்தியாவில் கொரோனா தொற்றின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்ற நிலையில் இந்திய கடல்தொழில் சமூகத்துடனான தொடர்பு காரணமாக இலங்கையின் கடலோரப் பகுதிக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை இலங்கையின் கடற்தொழில் சமூகத்திடமிருந்து கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை எனினும், இந்தியாவில் மோசமான நிலைமை இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.
சட்டவிரோத கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் இலங்கையர்கள் இந்தியர்களுடன் தொடர்புகளைப் பேணுகின்றனர்.
கடத்தல் போதைப்பொருட்களைப் கைப்பற்றும் போது பல கடல் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவதால் இது ஒரு பரவலான வணிகமாக மாறியுள்ளது.
அண்மையில் இந்தியாவில் இருந்து மஞ்சளை சட்டவிரோதமாக படகுகளில் கொண்டு வந்தமைக்காக பல கடல் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.
இந்தப் பின்னணியில் இலங்கையின் கடல் தொழிலாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.