இயற்கை வளங்களை பாதுகாக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையை பேணவும் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களின் விதைகள் நடும் திட்டம் கிளி மக்கள் அமைப்பு கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.
இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று மாலை இரணைமடு விரிவாக்க திட்டத்தில் உருவான புதிய அணைக்கட்டு அருகே ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 6 கிலோமீட்டர் நீளமுள்ள இவ் அணைக்கட்டின் இரு பக்கமும் பனம் விதைகள் நடப்பட்டது.
இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி அரச அதிபர், பனை அபிவிருத்தி சபை பணிப்பாளர், பெருந்தோட்ட அமைச்சின் இணைப்பு செயலாளர், ஆலோசகர், கிளிநொச்சி நீர்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், விவசாய திணைக்கள அதிகாரிகள், கமக்கார அமைப்புகளின் சம்மேளன தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரதேசத்தை சேர்ந்த சுமார் ஏழு கமக்கார அமைப்புகள், கிளி நகர ரோட்டரி கழகம், வட்டக்கச்சி மத்திய கல்லூரி சமூகம், இராமநாதபுரம் மகாவித்தியாலய சமூகம் ஆகியோர் கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையுடன் இணைந்து நான்கு பிரிவுகளாக சுமார் 6 கிலோ மீட்டர் நீளத்துக்கு பனம் விதைகளை விதைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளி மக்கள் அமைப்பினால் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நினைவாக புதிதாக வடிவமைக்கப்பட்ட டீ சேர்ட் அங்கிகளை அரச அதிபரிடம் சமூக ஆர்வலரும் வர்த்தகருமான சிவகுமார் அவர்களால் வழங்கி அறிமுகம் செய்யப்பட்டது.
பெருந்தோட்ட அமைச்சின் ஆலோசகரும் பனம் பொருள் தொடர்பான சிறப்பு அனுபவம் கொண்டவருமான சகாதேவனால் பனம் பயிரின் பயன்கள் அடங்கிய கையேடும் தயாரித்து வழங்கப்படது.
கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் சமூக சேவை ஆர்வலர்கள் முன்னின்று இந்த நிகழ்வினை ஒழுங்குசெய்திருந்தனர்.
இந்த நிகழ்வுக்கான அனுசரணையை வட்டக்கச்சி இராமநாதபுரம் சர்வதேச ஒன்றியம் மற்றும் கிளிநொச்சி குரு கார்ட்வெயர் நிறுவனம் வழங்கி இருந்தது.