நேர்மையாக மக்களுக்கு சேவையாற்றிய எந்தவொரு அரச அதிகாரியும் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பில் பாதுகாப்பை பெற்றுத்தருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிராமத்துடன் கலந்துரையாடலின் மூலம் வேலைத்திட்டத்துடன் கிராமத்திற்கு தேசிய வேலைத்திட்டத்தின் அரச அதிகாரிகளுக்கு தௌிவூட்டும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “2021 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாம் பாரிய தொகையை உள்நாட்டு தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்துள்ளோம்.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என்று எமது விமர்சகர்கள் எம்மீது குற்றும் சுமத்தினர். எனினும் நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காரணமின்றி நிதியை ஒதுக்கும் திட்டங்களை ஆரம்பித்ததில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தேர்தலை எதிர்பார்த்து எவ்விடயமும் இவ்வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. நாம் மக்களுக்கு அவ்வாறான மோசடிகளை செய்யமாட்டோம் என்பதை நாம் ஏற்கனவே கூறியிருக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் அவ்வாறு செய்யப்போவதில்லை.
இந்த வரவு செலவுத் திட்டம் கிராம விவசாயிகள், மீனவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை மேம்படுத்துவதற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவை செயற்படுத்துவதற்கு எமக்கு சர்வதேச நிபுணர்கள் அவசியமில்லை. அதனால் இவ்வரவு செலவுத் திட்டத்தை எமது அரச அதிகாரிகளே செயற்படுத்தவுள்ளனர். இதனை நீங்களே கொண்டு செல்லவுள்ளீர்கள்.
இது கடினமானதொன்று என்பது எமக்கு தெரியும். எனினும், அந்த கடினமான பணியை நீங்களே நிறைவேற்ற வேண்டும். இதுவரை செய்ததும் நீங்களே. அதுவும் எமது நாட்டின் கிராம மக்களுடன் ஒன்றிணைந்து. அம்மக்கள் தொழில் முனைவோருக்கான அறிவை பெற்ற, பெரும் பயிற்சி பெற்ற, நிறுவனங்களில் பணியாற்றி தேர்ச்சி பெற்றவர்கள் அல்ல. அவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய நேரிடும். அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியை குறைத்துக் கொள்ள வேண்டும். அரச அதிகாரிகளான நீங்கள் அரசாங்கத்தின் கருத்தை புரிந்துக் கொள்ள வேண்டும்.
கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்லும்போது மக்களின் தேவை எமக்கு புலப்படும். மேலும் ஒரு இயற்கை அனர்த்தத்தின் போது வெள்ள நிவாரணம் வழங்கியதற்காக முன்னாள் இராணுவ தளபதியை எப்.சி.ஐ.டி.க்கு அழைத்து விசாரணை நடத்தியிருந்தமை எனக்கு ஞாபகம் இருக்கின்றது. சில் உடைகள் வழங்கியமைக்காக ஜனாதிபதி செயலாளர், தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்ழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோர் சிறை வைக்கப்பட்டமை நீங்கள் அறிவீர்கள். நாம் இந்நிலையை நன்கு உணர்ந்துள்ளோம்.
எனவே இதற்கு நாம் தீர்வொன்றை வழங்குகின்றோம். நேர்மையுடன் சேவையாற்றிய எந்தவொரு அதிகாரிக்கும் தண்டனை வழங்க முடியாது. எனவே அதற்கு தேவையான அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பை வழங்குவதற்கு நாம் எதிர்பார்கின்றோம். சில் உடை வழக்கிலிருந்து விடுதலையான லலித் வீரதுங்க, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஆகியோர் மக்களுக்கு என்ன கூறினர்? நேர்மையுடன் மக்களுக்கு சேவையாற்றும் எந்தவொரு தருணமும் எதிர்மறை விளைவை ஏற்படுத்தாது என்பதாகும். எனவே, காணப்படும் சட்ட திட்டங்களுக்கு மேலாக இந்த நிதி மக்களின் நலனுக்காக உபயோகிக்கும் முறை குறித்து அனுபவம் வாய்ந்த நீங்கள் அறிவீர்களாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.