நாட்டில் நாளை மறுதினம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 31ஆம் திகதி வரையான இரண்டு வார காலத்துக்கு தனிமைப்படுத்தலுக்கான நடைமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை இலக்க முறைமையின் கீழ் நபர்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்வதற்கு வழங்கப்பட்டுள்ள நடைமுறைகளை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நடைமுறைகளுக்கு எதிராக செயற்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை திட்டமிடும்போது இந்நடைமுறை தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமென்றும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கிணங்க அடையாள அட்டை இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வீடுகளிலிருந்து ஒருவர் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வெளியில் செல்ல வேண்டுமென்றும் அருகிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி நடைமுறைகளுக்கு எதிராக செயற்படும் நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நேற்று முன்தினம் இரவு முதல் நாடளாவிய ரீதியில் பயணத் தடையை அமுல்படுத்தியுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை அந்த நடைமுறை அமுலிலிருக்கும். அந்த கால கட்டங்களில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மருந்தகங்கள் மட்டுமே திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மெனிங் சந்தை, பேலியகொடை மீன் சந்தை, நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்பட்டுள்ள அதேவேளை அங்கு மொத்த விற்பனை நடவடிக்கைகளை மட்டுமே முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதேவேளை திங்கட்கிழமை முதல் மீண்டும் 03 மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப் படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளன.
நாட்டில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப் படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள நிலையில் இரவு 11 மணி முதல் 4:00 வரைக்குமான பயணத் தடை எதிர்வரும் மே 31ஆம் திகதி வரை நடைமுறையில் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதேவேளை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 42 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட உள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.