மக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.
அச்செயற்பாட்டில் நிறுவன தலைவர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது மிகவும் முக்கியம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தலையீடு செய்து துரித வழிகாட்டலை வழங்கவும், செயற்திறனான வகையில் குறித்த சேவையை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.
அதற்கு நிறுவனத் தலைவர்களின் வழிகாட்டல் அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர், மக்கள் சேவையை பொறுப்பாகவும் கடமையாகவும் கருதி நிறைவேற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நிறுவனத் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் தமது நிறுவனங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், அமைச்சர் காமினி லொகுகே, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ண, தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சுமித் விஜேசிங்க, தொழிலாளர் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் ஸ்ரீயானந்த சில்வா, இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் நிஷாந்த சதம்பரண, வணிகத் தொழில்கள் மற்றும் சேவைகள் முற்போக்கு ஊழியர் சங்கத் தலைவர் ஜே.பி.மஹிந்த, சுயாதீன ஊழியர் சங்கத் தலைவர் டபிள்யூ. ஏ.கே. . சுராஜ் திலந்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.