செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எமது கையில் | மைத்திரி

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எமது கையில் | மைத்திரி

4 minutes read

அரசாங்கம் மூன்றில் இரண்டை தக்கவைக்கவும், அரசாங்கத்தை கொண்டு நடத்தும் வேளையிலும் புத்திசாலித்தனமாக, ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டும். இந்த அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கையில் தான் உள்ளது என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள் என முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சபையில் அரசாங்கத்தை எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, சபை அமர்வுகளின் போது ஆளுந்தரப்புக்குள் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும், பிரதான பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் பாரிய கருத்து மோதல் ஏற்பட்டது.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவையும், கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகரவையும் கடுமையாக விமர்சித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு பதில் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகையில்,

அமைச்சர் மஹிந்தானந்த, வேகமாக ஆவேசப்பட்டு உரையாற்றிவிட்டார். என்னை இலக்கு வைத்து கூறும் காரணிகளுக்கு  முன்னாள் ஜனாதிபதியாக பதில் கூறவேண்டிய உரிமை எனக்கும் உண்டு. நாம் யாருடனும் மோதிக்கொள்ள மாட்டோம், அவ்வாறான இனம் நாம் அல்ல, நாம் இரக்கப்படும் இனம். 

ஆனால் நாம் அடித்தால் இவ்வாறு அல்ல, வேறு விதத்தில் தான் அடிப்போம் என்பதையும் கூறிக்கொள்கின்றேன். அமைச்சர் மஹிந்தானந்த கூறிய விடயங்கள் குறித்து முரண்பாடுகள் இல்லை. நிகழ்கால ஜனாதிபதி எடுத்துக்காட்டாக உள்ளதாக கூறினார். அதுவும் பிரச்சினை இல்லை. ஆனால் எனது ஆட்சிக்கால வரவு செலவுகளை எடுத்துக்கொண்டு ஒப்பிடுவதன் மூலமாக நான் அனாவசியமாக செலவழித்துள்ளேன் என்ற காரணிகளை மக்களிடம் கொடுத்துள்ளனர். அவ்வாறு என்னாலும் ஒப்பிட முடியும். ஆனால் கண்ணாடி வீடுகளில் இருந்துகொண்டு கல்வீச நானும் தயாரில்லை.

எனக்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளுக்கு நான் எடுத்துக்காட்டாக இருந்தேன். அவர்கள் செலவுசெய்த விதம், பயணித்த விதம் என்பவற்றில் இருந்து நான் விலகி அவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தேன். விமானங்கள், ஹெலிகொப்டர் என்பன பாவித்த விதம் என்பவற்றை நிறுத்தி நான் 2015 ஆம் ஆண்டில் இருந்து எடுத்துக்காட்டாக இருந்தேன். 

ஆகவே மோதிக்கொள்ள சென்றால் எவ்வாறு காயம் ஏற்படும் என தெரியாது. 1947 ஆம் ஆண்டில் இருந்து இந்த நாட்டில் அரசாங்கங்கள் அதிகாரத்திற்கு வர ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு இடைநடுவே அந்த ஒத்துழைப்பு முறிந்து, அதன் விளைவுகள் கண்முன்னே உள்ளது. 

பண்டாரநாயக அரசாங்கம், ஜே.ஆர் அரசாங்கம், சந்திரிக்கா அரசாங்கம், 2014 ஆம் ஆண்டு என்னால் ராஜபக்ஷ அரசாங்கம் தோற்றது என்பவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவே மூன்றில் இரண்டை தக்கவைக்கவும் அரசாங்கத்தை நடத்துவது குறித்தும் இதனை விட புத்திசாலித்தனமாக, ஆழமாக சிந்திக்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கையில் தான் உள்ளது என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள். நாம் அரசாங்கத்திற்குள் மோதிக்கொண்டால்  அதன் விளைவு என்ன என்பதை இதற்கு 50-60 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே அரசாங்கங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த அரசாங்கமும் கூட்டணி அரசாங்கம், பிரதான கட்சியுடன் 12 பங்காளிக்கட்சிகள் இணைந்துள்ளனர். எம்மாலும் வேகமாக பேச முடியும், மோத முடியாது தான், நாம் அப்பாவிகள். ஆனால் எமக்கு அரசியல் அறிவு அனுபவம் உள்ளது. 

தமது தலைவரை தூக்கி வைக்க வேண்டும் என்பதற்காக கூறும் கதைகளை நாம் கண்டுகொள்ள மாட்டோம், அதற்காக எம்மை விமர்சிக்காது இருக்க வேண்டும். உங்களின் தலைவரின் அரசாங்கத்தில் தான் நாமும் உள்ளோம். எனவே அரசாங்கத்தில் குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். குத்துச்சண்டை வீரர்கள் நாமல்ல, நட்புறவை வைத்துக்கொள்ளுவோம், நாமும் மோதிக்கொள்ளும் வேளையில் ஒரு தகுதியான பொருந்தக்கூடிய விதத்தில் பேச வேண்டும்.

எனது வீடு குறித்து பேசும்போது ஏனையவர்களின் வீடு குறித்தும் தெரிவிக்க வேண்டும். நான் எவ்வளவு விமான பயணங்களை மேற்கொண்டுள்ளேன், என்ன செய்துள்ளேன் என கூறுகின்றனர். 

கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா காரணமாக சகல மாநாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்துமே தொழிநுட்ப ரீதியில் இடம்பெற்றுக்கொண்டுள்ளன. அதனால் சகல நாடுகளின் அரச தலைவர்களின் விமான பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே இப்போதுள்ள ஜனாதிபதியின் எடுத்துக்காட்டை நான் மதிக்கின்றேன், அதேபோல் இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளுக்கு நான் எடுத்துக்காட்டாக இருந்துள்ளேன்.

அதுமட்டுமல்ல, எனது பெயர் கூறாது நான் விவசாய ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ததாக கூறினீர்கள், யார் இவற்றையெல்லாம் உங்களுக்கு கூறுகின்றனர், அதனை அறிந்துகொண்டு உங்களுக்கு தெரிந்தமாதிரி இங்கு கூறுகின்றீர்கள் என்பது எமக்கும் தெரியும். ஆனால் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஜனாதிபதிக்கு பொய்கூறினார், அமைச்சரவைக்கு பொய்களை கூறினார், பாராளுமன்றத்திற்கு பொய்களை கூறனார்.

 மக்களுக்கு பொய்களை கூறினார், விவசாயிகளுக்கு பொய் கூறினார், நுகர்வோருக்கு பொய் கூறினார். இதனால் தான் விவசாயத்துறை பாரிய நெருக்கடிக்குள் வீழ்ந்து அரசாங்கம் தவறான பாதையில் சென்றது. இந்த காலகட்டத்தில் அரசாங்கம் பாரிய அவப்பெயரை சந்திக்க பிரதான காரணம் அமைச்சர் மஹிந்தானந்தவின் செயற்பாடும்,நடத்தையுமேயாகும். அதுதான் உங்களின் உருவ பொம்மையை எரிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. உங்களின் உருவ பொம்மையை நீங்களே தான் எரித்துக்கொண்டுள்ளீர்கள். மாறாக மக்கள் அல்ல.

அரசாங்கமாக செயற்பாடுகளில் உண்மைகளை பேச வேண்டும், நீங்கள் பேசுகின்ற சகல நேரங்களிலும் என்னிடம் அறிக்கை உள்ளது, எம்மிடம் பொருட்கள் உள்ளது என கூறிக்கொள்வீர்கள்.எமக்கும் இவ்வாறு கூறிக்கொள்ள முடியும். கைவசம் பொருட்கள் உள்ளதென்றால் அதனை வெளியில் அனுப்பாது பதுக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லையே. 

இந்த நாட்டில் நீண்டகால அரசியல் அனுபவம் உள்ள நம்பர் என்ற விதத்தில் நான் கூறுவது என்னவென்றால் சகல விடயத்திலும் பொறுமையாக இருக்கும் நபர் நான். நாம் அரசாங்கமாக செயற்படும் வேளையில் அதற்கமைய நட்புறவுடன், இணைந்து செயற்படுவோம் என்றார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More