வைத்தியர்களின் இடமாற்றம், புதிய வைத்தியர்களுக்கான நியமனம் உள்ளிட்ட விடயங்களில் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச இன்று ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையை நாளை முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதோடு, இதனால் வைத்தியசாலை கட்டமைப்பில் ஏற்படப் போகும் நெருக்கடிகளுக்கு சுகாதார அமைச்சும் அதன் அதிகாரிகளுமே பொறுப்பேற்ற வேண்டும் என்று அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பங்குபற்றலின்றி வெளியிடப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர்களின் இடமாற்ற பட்டியலை மீளப்பெறல், உள்ளக பயிற்சியை நிறைவு செய்து வைத்திய நியமனத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நியமன பட்டியலை எதிர்த்தல், தர வைத்தியர்களுக்கான இடமாற்றங்களை திகதிகளை அமுலாக்கும் திகதிகளில் காணப்படும் சிக்கலுக்கு தீர்வு வழங்காமை, சரியான பங்காளிகளை ஆலோசிக்காமல் மருத்துவ சேவை யாப்பு மாற்றப்பட்டமை, மருத்துவசபைக்கான தேர்தலை நடத்துவதற்கான ஒழுங்கமைப்புக்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாமை, தேசிய சம்பள கொள்கையை பாதிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகின்றமை உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்தே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.