குறித்த ஆவணம் தமிழ்த் தரப்புக் கட்சித் தலைவர்களின் பரிசீலனைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) புதிய நகல் ஆவணம் தயாரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஆவண நகல் தயாரிப்புக்காக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அனுப்பிவைத்த குறிப்பும் இதன்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த ஆவணத்தில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு அப்பாலும் செல்வோம் என 1987 முல் இலங்கை – இந்தியத் தலைவர்கள் வழங்கிய உறுதிமொழிகள் நினைவூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முயற்சியில் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ரெலோவின் பேச்சாளரும் இந்த முயற்சியின் இணைப்பாளருமான சுரேந்திரன் குருசாமி ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.