புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டை சவப்பெட்டிக்குள் தள்ளி இறுதி ஆணியை அடிக்க அரசாங்கம் தயாராகிறது | சஜித் கடும் சாடல்

நாட்டை சவப்பெட்டிக்குள் தள்ளி இறுதி ஆணியை அடிக்க அரசாங்கம் தயாராகிறது | சஜித் கடும் சாடல்

1 minutes read

நாட்டின் அனைத்து முக்கிய துறைகளையும் நிர்வகிப்பதில் முழுமையாகத் தோல்வியடைந்திருக்கும் தற்போதைய அரசாங்கம், ஒட்டுமொத்த நாட்டையும் சவப்பெட்டிக்குள் தள்ளி அதன்மீது கடைசி ஆணியை அடிப்பதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றது.

மறுபுறம் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டையும் மக்களையும் மயானத்தை நோக்கி அழைத்துச்செல்வதற்கான பாதையைத் துரிதமாகத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

திஸ்ஸமஹராமவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்கான மனிதாபிமான சுற்றுலாவில் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

தற்போதைய அரசாங்கம் எதில் வெற்றியடைந்திருக்கின்றது? அடுப்பு எரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற விறகு இப்போது பல்பொருள் அங்காடியில் விற்பனை செய்யப்படுகின்றது.

நாளாந்தம் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கின்றன. திரவ உரம் வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களும் வெடிக்கின்றன. முதல்நாள் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல்கள் மறுநாளே இரத்துச்செய்யப்படுகின்றன.

இரவிரவாக பெருந்தொகைப் பணம் புதிதாக அச்சடிக்கப்படுகின்றன. இவ்வாறான பல்வேறு செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் ஒட்டுமொத் நாட்டையும் சவப்பெட்டிக்குள் தள்ளி, அதன்மீது கடைசி ஆணியை அடித்துக்கொண்டிருக்கின்றது.

நாட்டையும் மக்களையும் மயானத்தை நோக்கி அழைத்துச்செல்வதற்கான பாதையை அஜித் நிவாட் கப்ரால் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார்.

நாம் நேசிக்கின்ற இந்த நாடு தற்போதைய அரசாங்கத்தினால் முழுவதுமாக அழிக்கப்பட்டிருக்கின்றது. அரசாங்கத்தை விடவும் கிராமங்களிலுள்ள மரண உதவி சங்கங்கள் பன்மடங்கு சிறந்தவையாகும். நாடெங்களிலும் அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றார்கள்.

அவ்வாறு காத்திருக்கும்போது அவ்வீதியினூடாகப் பயணிக்கின்ற ஆளுந்தரப்பின் முக்கியஸ்தர்களை நோக்கி மக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் நிலையுருவாகியுள்ளது. 

நாட்டை ஆள்பவர்கள் அல்லது மக்களின் கருத்துக்களைக் கேட்டறியவேண்டிய பொறுப்பிலிருப்பவர்கள், அவர்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்களையும் செவிமடுக்கவேண்டியது அவசியமாகும். ஆனால் தற்போதைய அரசாங்கம் மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய இடத்தில் அமைந்திருந்த வர்த்தக நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

எப்போதும் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்துகொண்டும், அதிசொகுசு வாகனங்களில் பயணித்துக்கொண்டும் தீர்மானங்களை மேற்கொள்ளாமல் வீதிகளில் இறங்கி, பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளைக் கேட்டறியுமாறு ஆட்சியாளர்களிடம் வலியுறுத்துகின்றோம்.

அதனூடாக மாத்திரமே சாதாரண மக்கள் தற்போது முகங்கொடுத்திருக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் விளங்கிக்கொள்ளமுடியும். 

அதேவேளை அரசாங்கம் உதவிகளைக் கோரியிருக்கக்கூடிய சர்வதேச நாடுகளின் பிரதானிகளும் சர்வதேச பொதுக்கட்டமைப்புக்களின் உயரதிகாரிகளும் அதுபற்றிய எமது அபிப்பிராயத்தைக் கேட்டார்கள். 

அத்தகைய சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு உடனடியாக உதவுமாறு நாம் வலியுறுத்தினோம். நாட்டுமக்களின் நலனை உறுதிசெய்வதுடன் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பது மாத்திரமே எமது ஒரேயொரு இலக்காகும் என்று குறிப்பிட்டார்.  

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More