அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிப்பதற்கும் வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டை விளங்கிக்கொள்ளவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, இலங்கையில் கருத்துச்சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியினால் அவசரகாலச்சட்டம் மற்றும் ஊரடங்குச்சட்டம் என்பன பிறப்பிக்கப்பட்டதுடன், சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை, தமது கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளை வெளிக்காட்டுவதற்கான உரிமை என்பன மக்களின் அடிப்படை உரிமைகளாகும்.
அவை மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் அதேவேளை, அவை பாதுகாக்கப்படவேண்டியது அவசியமாகும்
அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிப்பதற்கும், வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், தமது செயற்பாட்டை அமைதியான முறையில் மேற்கொள்வதற்கான சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.