சீனிக்கான வரியைக் குறைத்ததன் மூலம் அரசு இழந்த வருமானத்தை கைப்பற்றியுள்ள தரப்பிடமிருந்து மீண்டும் அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய கணக்காய்வு ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
ஒரு கிலோ கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரியை 50 ரூபாவிலிருந்து 25 ரூபாவினால் குறைப்பதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நிவாரணம் நுகர்வோருக்கு கிடைத்துள்ளதா என்பது தொடர்பில் மதிப்பீடு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்விற்கமைய இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட வர்த்தக வரியை 25 சதமாக குறைப்பதற்கு 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இதன்பின்னர் சீனிக்கான நிர்ணய விலை நீக்கப்பட்டதுடன் 2021 ஆம் அண்டு பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி வரையிலான 4 மாதங்களில் அரசுக்கு 16,763 மில்லியன் ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக குறித்த கணக்காய்வில் தெரியவந்துள்ளது.