ராஜபக்ஸ குடும்பம் 30 மாதங்களில் நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச்சென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புரட்சிக்கான விடுதலைப் பயணத்தின் மூன்றாம் நாள் இன்றாகும்.
இன்றைய பேரணி கலிகமுவ நகரில் ஆரம்பமானது.
இதன்போது, தேசிய வளங்களும் தேசிய சொத்துகளும் திருடப்பட்டமையின் காரணமாகவே நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய பாதுகாப்பையும் திருடர்களை பிடிக்கும் பொறுப்பை ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்குவதாகக் குறிப்பிட்ட தமது கருத்தில் தற்போதும் மாற்றமில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
30 மாதங்களாக நாட்டைக் கொள்ளையடித்து, நாட்டிலுள்ள வட மாகாண சொத்துகளை ஒரு நாட்டிற்கும் தென் மாகாண சொத்துகளை ஒரு நாட்டிற்கும் கிழக்கு மாகாண சொத்துகளை வேறொரு நாட்டிற்கும் விற்றுள்ள திருடர்களுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கப்போவதில்லை எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
புரட்சிக்கான விடுதலைப் பயணம் எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் இன்றும் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.